கூடங்குளத்தில் 3, 4-வது அணு உலை கட்டுமான பணிகள் 65 சதவீதம் நிறைவு - அதிகாரி தகவல்


கூடங்குளத்தில் 3, 4-வது அணு உலை கட்டுமான பணிகள் 65 சதவீதம் நிறைவு - அதிகாரி தகவல்
x

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3, 4-வது அணு உலை கட்டுமான பணிகள் 65 சதவீதம் நிறைவடைந்து உள்ளதாக அணுமின் நிலைய வளாக இயக்குனர் பிரேம்குமார் கூறினார்.

திருநெல்வேலி

வள்ளியூர்:

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையம் சார்பில் செட்டிகுளம் அணுவிஜய் நகரியத்தில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் பிரேம்குமார் தலைமை தாங்கி, தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் அவர் பேசியதாவது:-

கூடங்குளம் அணுமின் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்தே தேசத்தை வளப்படுத்தி வருகிறது என்று கூறுவதில் பெருமிதம் கொள்கிறேன். இதுவரை கூடங்குளம் முதல் அணு உலை மூலம் 45 ஆயிரத்து 711 மில்லியன் யூனிட் மின்சாரமும், இரண்டாவது அணு உலை மூலம் 32 ஆயிரத்து 891 மில்லியன் யூனிட் மின்சாரமும் ஆக மொத்தம் 78 ஆயிரத்து 602 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு முதல் அணு உலையின் மூலம் 7 ஆயிரத்து 59 மில்லியன் யூனிட் மின்சாரமும், இரண்டாவது அணு உலையின் மூலம் 7 ஆயிரத்து 57 மில்லியன் யூனிட் மின்சாரமும் என மொத்தம் 14 ஆயிரத்து 116 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு இருக்கிறது. இது எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக உற்பத்தி என்பது குறிப்பிடத்தக்கது.

3 மற்றும் 4 அணு உலைகள் கட்டுமான பணிகள் 65 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. 5 மற்றும் 6-வது அணு உலைகள் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. சமூக மேம்பாட்டு திட்டத்தின் மூலம் கூடங்குளம் மற்றும் அருகிலுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவது தொடர்பாக கிராமங்களில் உள்கட்டமைப்பு மேம்பாடு, உள்ளூர் இளைஞர்களின் திறன் மேம்பாடு, போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள், நடமாடும் கிளினிக் மூலம் சுகாதாரம் வழங்குதல் போன்றவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிராமப்புற பள்ளிகளில் கல்வியின் தரத்தை மேம்படுத்த 85 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு சமூக மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ.25 கோடி செலவிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் ரஷிய கூட்டமைப்பு தலைவர் யுவனிஷவ், நிலைய இயக்குனர் ஷவாந்த், 5 மற்றும் 6-வது அணு உலை திட்ட இயக்குனர் சுரேஷ், மத்திய தொழில் பாதுகாப்பு படை கமாண்டன்ட் ஜிதந்திர பாபு, மனிதவள மேம்பாட்டு துறை துணை பொது மேலாளர் விஜயராணி, இந்திய, ரஷிய விஞ்ஞானிகள், ஊழியர்கள், பள்ளி மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story