ரூ.1 கோடியில் புதிய பாலம் கட்டும் பணி மும்முரம்


ரூ.1 கோடியில் புதிய பாலம் கட்டும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 16 May 2023 1:15 AM IST (Updated: 16 May 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

மங்குழியில் ரூ.1 கோடி செலவில் புதிய பாலம் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

நீலகிரி

கூடலூர்

மங்குழியில் ரூ.1 கோடி செலவில் புதிய பாலம் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

பாலம் இடிந்தது

கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட மங்குழியில் நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஆற்றின் குறுக்கே மிகப்பழமையான பாலம் இருந்தது. அந்த பாலம் பழுதடைந்து காணப்பட்டதால், எந்த நேரத்திலும் இடிந்து விழலாம் என்ற அச்சம் நிலவி வந்தது.

இதையடுத்து கடந்த ஆண்டு பெய்த கன மழையில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் பாலம் உடைந்து விழுந்தது. மேலும் பாலத்தில் நின்றிருந்த பொதுமக்கள் சிலர் ஆற்றுக்குள் தவறி விழுந்தனர். பின்னர் அவர்களை அக்கம்பக்கத்தினர் பாதுகாப்பாக மீட்டனர்.

ரூ.1 கோடியில்...

இதற்கிடையே பாலம் உடைந்து விழுந்ததால் மங்குழியில் இருந்து கூடலூர் செல்லும் சாலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக போக்குவரத்து துண்டித்தது. இதனால் பள்ளிக்கூட மாணவர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி வந்து கூடலூருக்கு சென்று வந்தனர்.

இதைத்தொடர்ந்து பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளுக்கு பிறகு கூடலூர் நகராட்சி நிர்வாகம் ரூ.1 கோடியே 13 லட்சம் நிதி ஒதுக்கியது. தொடர்ந்து அப்பகுதியில் ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

பணி வேகமாக நடக்கிறது

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

கூடலூர் பகுதியில் அடுத்த மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது. இதனால் பாலம் கட்டுமான பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் முன்கூட்டியே மழை பெய்ய தொடங்கினால் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து கட்டுமான பணி தொடர்ந்து நடைபெறுவதில் தடங்கல் ஏற்படலாம். மழையை பொறுத்து பாலம் கட்டுமான பணி நடைபெறும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story