ரூ.1 கோடியில் புதிய பாலம் கட்டும் பணி தொடங்கியது


ரூ.1 கோடியில் புதிய பாலம் கட்டும் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 12 March 2023 12:15 AM IST (Updated: 12 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே ஆற்று வாய்க்கால் குறுக்கே ரூ.1 கோடியில் புதிய பாலம் கட்டும் பணி தொடங்கியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

நீலகிரி

கூடலூர்

கூடலூர் அருகே ஆற்று வாய்க்கால் குறுக்கே ரூ.1 கோடியில் புதிய பாலம் கட்டும் பணி தொடங்கியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

பாலம் உடைந்தது

கூடலூர் பகுதியில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இக்காலகட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல இடங்களில் பாலங்கள், சாலைகள் உடைந்து சேதம் அடைந்து வருகிறது. கடந்த ஆண்டு கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட மங்குழி பகுதியில் ஆற்று வாய்க்காலில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. அப்போது வாய்க்கால் குறுக்கே இருந்த சிமெண்டு பாலம் உடைந்து ஆற்றுக்குள் விழுந்தது. இந்த சமயத்தில் அதில் நடந்து சென்று கொண்டிருந்த சிலர் ஆற்றுக்குள் தவறி விழுந்தனர். அவர்களை, அப்பகுதி மக்கள் காப்பாற்றினர்.

போக்குவரத்து துண்டிப்பு

பாலம் உடைந்ததால் மங்குழி சுற்று வட்டார பகுதி மக்கள் கூடலூர் நகருக்கு வர முடியாமல் தவித்தனர். தொடர்ந்து பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி வரும் நிலை ஏற்பட்டது. இதனால் பல்வேறு தரப்பினரும் கடும் பாதிப்புக்கு ஆளாகினர். எனவே ரூ.2 லட்சம் செலவில் வாய்க்கால் குறுக்கே தற்காலிக பாலத்தை நகராட்சி நிர்வாகம் அமைத்தது. இதனால் ஆற்றை பொதுமக்கள் நடந்து சென்று கடந்தனர். ஆனால் வாகன போக்குவரத்து முழுமையாக துண்டித்தது.

இதைத்தொடர்ந்து புதிய பாலம் கட்ட வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதை ஏற்று ரூ.1 கோடியே 13 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.

மகிழ்ச்சி

இதையடுத்து பாலம் கட்டுமான பணி நேற்று தொடங்கியது. இதற்காக பூமி பூஜை நடைபெற்றது. இதில் நகராட்சி தலைவர் பரிமளா, துணைத்தலைவர் சிவராஜ், பணி மேற்பார்வையாளர் ஆல்தொரை, கவுன்சிலர் ராஜூ மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறும்போது, புதிய பாலம் கட்டும் பணி 2 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது என்றனர். புதிய பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டு உள்ளதால் நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துள்ளதாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.


Next Story