புத்தக திருவிழா அரங்குகள் அமைக்கும் பணி
பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் நடக்கும் புத்தக திருவிழாவிற்காக அரங்குகள் அமைக்கும் பணியை கலெக்டர் கார்த்திகேயன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் நடக்கும் புத்தக திருவிழாவிற்காக அரங்குகள் அமைக்கும் பணியை கலெக்டர் கார்த்திகேயன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
புத்தக திருவிழா
நெல்லை மாவட்டத்தில் தமிழக அரசின் சார்பில் வருகிற 25-ந்தேதி முதல் அடுத்த மாதம் 7-ந்தேதி வரை பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் 6-வது பொருநை நெல்லை புத்தகத்திருவிழா நடக்கிறது. இது அனைவருக்குமான பன்முகத் தன்மை உடைய புத்தகத்திருவிழாவாக நடத்தப்பட உள்ளது.
புத்தகத்திருவிழாவில் 25-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை 3 தினங்களும் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு அரங்குகள் மற்றும் பயிற்சி பட்டறைகள் ஏற்பாடு செய்யப்படுகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்குபெறும் தொடர் வாசிப்பு, மாணவர் கையெழுத்து இதழ், கல்லூரி மாணவர்களுக்கான இதழியல் பயிற்சி பட்டறை மற்றும் புத்தக வெளியீடு ஆகியவை நடைபெறுகின்றன.
கலெக்டர் பார்வையிட்டார்
இதில் தென்னிந்திய புத்தக பணியாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் 100-க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நெகிழி இல்லா புத்தக திருவிழாவாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இங்கு அரங்குகள் அமைக்கும் பணியை கலெக்டர் கார்த்திகேயன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பொதுமக்களும், மாணவர்களும் பங்கேற்கும் வகையில் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளும் இது நடைபெற உள்ளது. பள்ளி குழந்தைகள் இடையே என்னை ஈர்த்த புத்தகம் என்ற தலைப்பில் புத்தகம் விமர்சனம் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
பயிற்சி அரங்குகள்
அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்குவதற்கு புரவலர்களை ஈர்க்கும் வகையில் புத்தக பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பத்திரிகை தொடர்பான பயிற்சி அரங்குகள் அமைக்கப்படுகிறது. போட்டிகள் மற்றும் புத்தக திருவிழாவில் நாள்தோறும் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளின் விவரங்களை www.nellaibookfair.in இணையதளத்தில் பார்வையிடலாம் என்று கலெக்டர் கார்த்திகேயன் கூறியுள்ளார்.
ஆய்வின்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் கணேஷ்குமார், பேரிடர் மேலாண்மை தாசில்தார் செல்வம், பாளையங்கோட்டை தாசில்தார் ஆனந்தபிரகாஷ், எழுத்தாளர்கள் நாறும்புநாதன், ரமேஷ்ராஜா, நூலகர் முத்துகிருஷ்ணன், கணபதி சுப்பிரமணியன், சபேசன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.