சோழர் அருங்காட்சியகம் அமைக்கும் பணிவிரைவில் தொடக்கம்


சோழர் அருங்காட்சியகம் அமைக்கும் பணிவிரைவில் தொடக்கம்
x

தஞ்சையில், சோழர் அருங்காட்சியகம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

தஞ்சாவூர்

தஞ்சையில், சோழர் அருங்காட்சியகம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

கருத்தரங்கம்

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 'அண்மைக்கால ஆய்வுகள் காட்டும் தமிழ்நாட்டு வரலாறு' என்ற தலைப்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு கருத்தரங்கம் நேற்று நடந்தது. கருத்தரங்கிற்கு தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் தலைமை தாங்கினார். பேராசிரியர் செல்வகுமார் வரவேற்றார். தமிழக தொல்லியல் துறை கல்வி மற்றும் ஆய்வு ஆலோசகர் ராஜன் அறிமுக உரை ஆற்றினார்.

இந்த கருத்தரங்கை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது:-

தொல்லியல் ஆய்வுகள்

இந்தியாவில் உள்ள வேறு எந்த மாநிலத்திலும் மேற்கொள்ளப்படாத தொல்லியல் ஆய்வுகள் தமிழகத்தில்தான் அதிக அளவில் செய்யப்படுகிறது. இதற்கான நிதியுதவியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்து வருகிறார்.

இந்தியாவின் வரலாறு கங்கை சமவெளியில் எழுதுவது அல்ல, அது காவிரிக்கரையில் இருந்து எழுதக்கூடிய வரலாறாக இருக்க வேண்டும் என்பதை நிரூபிக்கக்கூடிய வகையில் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

சவால்களை எதிர்கொள்ள முடியும்

கீழடி, பொருநை, வெம்பக்கோட்டை வைப்பாறு போன்ற இடங்களில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் மூலம் தமிழ்நாட்டினுடைய வரலாறு எந்த அளவுக்குப் பின்னோக்கி செல்கிறது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. நாம் என்னவாக இருந்தோம் என்பதை அறிந்து கொண்டால்தான், எதிர்காலத்தில் நாம் என்னவாக வர வேண்டும் என்பதை தீர்மானிக்க இயலும்.

நம்முடைய தமிழர் நாகரிகம், நம் சமுதாயம் எப்படி இருந்தது, தமிழனுடைய நாகரிகம் எப்படி எல்லாம் மறைக்கப்பட்டது என்பதை எல்லாம் அறிந்து கொண்டால்தான் எதிர்காலங்களில் வரக்கூடிய சவால்களை எதிர்கொள்ள முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக கருத்தரங்க ஆய்வுக்கூட்டுரை தொகுப்பினை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெற்றுக்கொண்டார். கருத்தரங்கில் கலெக்டர் தீபக் ஜேக்கப், துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ., மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி மற்றும் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

முடிவில் தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம் நன்றி கூறினார்.

சோழர் அருங்காட்சியகம்

பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களிடம் கூறுகையில், தொல்லியல் துறைக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகுந்த அக்கறையோடு ஆதரவு தருகிறார். இதனால் பல இடங்களில் ஆய்வு நடந்து வருகிறது. குறிப்பாக, கீழடி அருங்காட்சியகம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து பொருநையில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணி வேகமாக நடந்து வருகிறது.

நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டபடி தஞ்சையில், சோழர்களின் பெருமையை விளக்கும் விதமாக சோழர் அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. எனவே மிக விரைவிலேயே அருங்காட்சியம் அமைப்பதற்கான பணி தொடங்கப்படவுள்ளது. இதேபோல கங்கைகொண்ட சோழபுரத்திலும் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றார்.


Next Story