திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ.15 கோடியில் வகுப்பறை கட்டும் பணி
திருப்பத்தூர் மாவட்டத்தில் 42 பள்ளிகளில் ரூ.15 கோடியில் வகுப்பறை கட்டும் பணியை கலெக்டர் அமர்குஷ்வாஹா தொடங்கி வைத்தார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 42 பள்ளிகளில் ரூ.15 கோடியில் வகுப்பறை கட்டும் பணியை கலெக்டர் அமர்குஷ்வாஹா தொடங்கி வைத்தார்.
பள்ளி வகுப்பறை
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில், பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் தமிழ்நாடு முழுவதும் ரூ.784 கோடி மதிப்பீட்டில் 5,351 புதிய பள்ளி வகுப்பறை கட்டும் பணியை தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஊராட்சி ஒன்றியம், கிழக்குபதனவாடி ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் வகுப்பறை கட்டுவதற்கான தொடக்க விழா நடைபெற்றது.
ஒன்றியக்குழு துணைத்தலைவர் ஜி.மோகன்குமார் தலைமை தாங்கி வரவேற்றார். கலெக்டர் அமர்குஷ்வாஹா, பள்ளி வகுப்பறை கட்டுவதற்கான பணியை தொடங்கி வைத்தார்.
ரூ.15 கோடியில்...
இந்த திட்டத்தில் மாவட்டத்தில் ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்தில் 9 பள்ளிகளில் 20 வகுப்பறை, ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் 7 பள்ளிகளில் 15 வகுப்பறை, கந்திலி ஒன்றியத்தில் 4 பள்ளிகளில் 8 வகுப்பறை, மாதனூர் ஒன்றியத்தில் 7 பள்ளிகளில் 20 வகுப்பறை, நாட்டறம்பள்ளி ஒன்றியத்தில் 6 பள்ளிகளில் 8 வகுப்பறை, திருப்பத்தூர் ஒன்றியத்தில் 9 பள்ளிகளில் 18 வகுப்பறை என மொத்தம் 6 ஊராட்சி ஒன்றியங்களில் 42 பள்ளிகளில் ரூ.14 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் 93 வகுப்பறைகள் கட்டப்படுகிறது.
இந்த பணிகள் அனைத்தும் 4 மாதத்திற்குள் நிறைவுபெற்று செயல்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்று கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, உதவி திட்ட அலுவலர் செல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாவதி, கந்திலி ஒன்றியக்குழு தலைவர் திருமதி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சுப்பிரமணி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.