கவுண்டன்ய மகாநதியில் வெள்ள தடுப்பு சுவர் அமைக்கும் பணி


கவுண்டன்ய மகாநதியில் வெள்ள தடுப்பு சுவர் அமைக்கும் பணி
x

குடியாத்தம் கவுண்டன்ய மகாநதியில் ரூ.3 கோடியில் வெள்ள தடுப்பு சுவர் அமைக்கும் பணியை அதிகாரி ஆய்வு செய்தார்.

வேலூர்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கவுண்டன்ய மகாநதி ஆற்றின் இருபக்கமும் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த சுமார் 1,500-க்கும் அதிகமான வீடுகளை சில மாதங்களுக்கு முன்பு அகற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து குடியாத்தம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் ஆற்றின் இருபுற கரைகளிலும் ரூ.3 கோடி மதிப்பீட்டில் வெள்ள தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த பணிகளை நீர்வளத்துறை வேலூர் கோட்ட செயற் பொறியாளர் ஆர்.ரமேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆய்வின்போது குடியாத்தம் நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன், நீர்வளத்துறை உதவி செயற் பொறியாளர் பி.கோபி, உதவி பொறியாளர் ஆர்.ராஜேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தொடர்ந்து நீர்வளத்துறை செயற் பொறியாளர் ரமேஷ் கூறுகையில், கவுண்டன்ய மகாநதி ஆற்றில் 2 பக்க கரைகளில் 2½ கிலோ மீட்டர் நீளத்திற்கு வெள்ள தடுப்பு சுவர் அமைக்கப்படுகிறது. சுமார் 5 மீட்டர் உயரத்திற்கும் 7 மீட்டர் அகலத்திற்கும் இந்த வெள்ள தடுப்பு சுவர் அமைக்கப்படுகிறது. பருவமழைக்கு முன்னதாகவே திட்டப் பணிகள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பாக்கம் ஏரியிலிருந்து கால்வாய் மூலம் கவுண்டன்ய மகாநதி ஆற்றிற்குள் தண்ணீர் வருவதற்கும், நெல்லூர் பேட்டை ஏரியில் நிரம்பி வழியும் தண்ணீர் கவுண்டன்ய மகாநதி ஆற்றிற்கு வருவதற்காகவும் வெள்ள தடுப்புச் சுவரின் 2 இடங்களில் உள்வாங்கிகள் அமைக்கப்பட்டு கதவுகள் பொருத்தப்படும், காமராஜர் பாலத்தை பலப்படுத்தும் வகையில் 2 பக்க கரை பகுதியில் வெள்ள தடுப்பு அலைக்கற்கள் பதிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story