7 ரெயில் நிலையங்களில் லிப்டுகள் அமைக்கும் பணி


7 ரெயில் நிலையங்களில் லிப்டுகள் அமைக்கும் பணி
x

மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட 7 ரெயில் நிலையங்களில் லிப்டுகள் அமைக்கும் பணி நடைபெற உள்ளது.

மதுரை

மதுரை கோட்ட ரெயில்வேயில் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து மூலம் கடந்த ஜூலை மாதம் வரை ரூ.359 கோடி வருமானமாக கிடைத்துள்ளது. அதற்கேற்ப பயணிகளுக்கான வசதிகள் மேம்படுத்தப்படவில்லை. இதற்கிடையே ரெயில்வே மட்டுமின்றி பல்வேறு நிதி ஆதாரங்களின் மூலம் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. அதாவது, பிளாட்பாரங்களை உயர்த்துதல், நீட்டித்தல், மேற்கூரைகள் அமைத்தல், ரெயில் நிலைய கட்டிடங்களை சீரமைத்தல், நடை மேம்பாலங்கள் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. அதனை தொடர்ந்து, மதுரை கோட்டத்துக்கு உள்பட்ட கொடைரோடு, புதுக்கோட்டை, சிவகங்கை, மானாமதுரை ஆகிய ரெயில் நிலையங்களில் தலா ஒரு லிப்டு அமைக்கப்பட உள்ளது. காரைக்குடி, பரமக்குடி மற்றும் ராமநாதபுரம் ரெயில் நிலையங்களில் தலா 2 லிப்டுகள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக ரூ.1 கோடியே 25 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் தொடங்கிய 10 மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணிகள் அடுத்த மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பணிகள் முடிவடையும் பட்சத்தில், மேற்கண்ட ரெயில் நிலையங்களில் வயதான பயணிகள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் உள்ளிட்டோர் சிரமமின்றி பிளாட்பாரங்களை கடக்க முடியும்.


Next Story