தேனியில் கிடப்பில் போடப்பட்ட நவீன நிழற்குடை அமைக்கும் பணி
தேனியில் கிடப்பில் போடப்பட்ட நவீன நிழற்குடை அமைக்கும் பணியால் பயணிகள் வெயிலில் வாடி வருகின்றனர்.
தேனியில், மதுரை சாலையில் உள்ள பங்களாமேடு வடக்குப்பகுதியில் பல ஆண்டுகளாக பயணிகள் நிழற்குடை இருந்தது. அது தொடர்ந்து மக்களின் பயன்பாட்டில் இருந்தது. அதற்கு தெற்குப் பகுதியில் சாலையோரம் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது. ஆனால், அந்த நிழற்குடை இதுவரை பயன்பாட்டுக்கு வரவில்லை. 7 ஆண்டுகள் கடந்தும் திறப்பு விழா கூட நடத்தப்படாமல் உள்ளது.
திறப்பு விழா நடத்தப்பட்டு, அந்த இடம் பஸ் நிறுத்தமாக அங்கீகரிக்கப்பட்டு அரசு போக்குவரத்து கழகத்துக்கு தெரிவிக்கப்பட்டால் தான் அங்கு பஸ்கள் நின்று செல்ல முடியும் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து காட்சிப் பொருளாகவே பயணிகள் நிழற்குடை உள்ளதால் பஸ்கள் அங்கிருந்து சுமார் 100 அடி தொலைவில் நிறுத்தப்படுகிறது. இதனால் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர்.
அதுபோல், வடக்குப் பகுதியில் பயன்பாட்டில் இருந்த நிழற்குடையை அகற்றிவிட்டு, நவீன வசதிகளுடன் கூடிய நிழற்குடை அமைக்க முடிவு செய்யப்பட்டது. தேனி எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.8 லட்சம் ஒதுக்கீடு செய்து நிழற்குடை அமைக்க கடந்த ஓராண்டுக்கு முன்பு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. குளிரூட்டப்பட்ட (ஏ.சி.) வசதியுடன் கூடியதாக இந்த நிழற்குடை அமைக்க திட்டமிடப்பட்டது.
மேலும் பகுதியில் ஓரிரு பெண்கள் சிறு கடைகள் வைத்து பிழைப்பு நடத்திக் கொள்ள அனுமதி அளிக்கலாம் என்றும் பரிசீலனை செய்யப்பட்டது. இதற்காக கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பழைய நிழற்குடையின் மேற்கூரை அகற்றப்பட்டது. தற்போது அதன் திண்ணை மட்டும் காட்சி பொருளாய் இருக்கிறது. அதன்பிறகு புதிய நிழற்குடை அமைக்கும் பணிகள் தொடங்கப்படவில்லை. தொடர்ந்து இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், பஸ்சுக்காக காத்திருக்கும் மக்கள் வெயிலில் வாடும் நிலை உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் தாமதமின்றி இதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.