தமிழ்நாடு ஓட்டலுக்கு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை


தமிழ்நாடு ஓட்டலுக்கு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை
x
தினத்தந்தி 22 Jun 2023 12:15 AM IST (Updated: 22 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் உள்ள தமிழ்நாடு ஓட்டல் கட்டிடம் இடிக்கப்பட்டு, புதிதாக கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம்


நாகையில் உள்ள தமிழ்நாடு ஓட்டல் கட்டிடம் இடிக்கப்பட்டு, புதிதாக கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஆய்வு

தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேற்று நாகை வந்தார். நாகை அக்கரைப்பேட்டை செல்லும் சாலையில் தோணித்துறை ரெயில்வே கேட் அருகே மூடிக்கிடக்கும் தமிழ்நாடு ஓட்டலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் ஓட்டலின் வரவேற்பு அறை, உள்ளறைகள் மற்றும் வளாகம் உள்ளிட்டவற்றை பார்வையிட்ட அமைச்சர், கட்டிடத்தின் தற்போதைய நிலை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து அருகில் உள்ள பீரங்கி மேடை பூங்காவை பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மூடப்பட்டது

நாகையில் கடந்த 1989-ம் ஆண்டு சுற்றுலாத்துறை மூலம் கலைஞரால், தமிழ்நாடு ஓட்டல் திறக்கப்பட்டது. இந்த ஓட்டல் 20 ஆண்டு காலம் சிறப்பாக செயல்பட்டது.

2008-ம் ஆண்டுக்கு பின்னர் கட்டிடங்கள் சேதம் அடைந்ததால், தமிழ்நாடு ஓட்டலை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு மூடப்பட்டது.

புதிய கட்டிடம்

இதனை தனியாரிடம் கொடுத்தும் அவர்களால் எடுத்து நடத்த முடியவில்லை. எனவே இந்த கட்டிடத்தை முழுமையாக இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து துறைகளையும் மேம்படுத்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

அதன்படி இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சுற்றுலாத்துறைக்கு என 300-க்கும் மேற்பட்ட இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த இடங்களில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

சுற்றுலா அலுவலகம்

தொடர்ந்து கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது நாகையில், மாவட்ட சுற்றுலா அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார்.

இந்த ஆய்வின்போது சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி, மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், தமிழக மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், நகர்மன்ற தலைவர் மாரிமுத்து உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story