ரூ.50 லட்சத்தில் புதிய படிக்கட்டுகள் அமைக்கும் பணி
பழனி முருகன் கோவிலில் ரூ.50 லட்சத்தில் புதிய படிக்கட்டுகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
பழனி முருகன் கோவில்
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மலைக்கோவிலுக்கு அடிவாரத்தில் இருந்து செல்ல படிப்பாதை, யானைப்பாதை ஆகியவை பிரதானமானதாக உள்ளது. பக்தர்கள் எளிதாக மலைக்கோவிலுக்கு சென்று வரும் வகையில் ரோப்கார், மின்இழுவை ரெயில் ஆகிய சேவைகளும் உள்ளன.
இதன் வழியே ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர். எனினும் நேர்த்திக்கடன் செலுத்துவோர், காவடி எடுத்து அலகு குத்தி வரும் பக்தர்கள் படிப்பாதை, யானைப்பாதையையே பயன்படுத்தி வருகின்றனர்.
படிக்கட்டுகள் அமைக்கும் பணி
படிப்பாதை வழியே செல்லும் பக்தர்களின் வசதிக்காக குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் பக்தர்கள் மீது வெயில் படாமல் இருக்க நிழல் மண்டபங்கள், இருக்கைகள் உள்ளன. படிப்பாதை வழியே செல்லும் பக்தர்கள் இங்கு அமர்ந்து இளைப்பாறி செல்கின்றனர்.
இந்நிலையில் பழனி கோவில் படிப்பாதையில் பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக பழனி கோவிலில் படிப்பாதை-யானைப்பாதை இணையும் இடத்தில் இருந்து மலைக்கோவில் வெளிப்பிரகாரம் வரை உள்ள படிகள் சிமெண்டால் அமைக்கப்பட்டு இருந்தது. பக்தர்களின் வசதிக்காக இந்த படிக்கட்டுகளை அகற்றிவிட்டு கருங்கற்களால் ஆன படிக்கட்டுகள் அமைக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. தற்போது படிக்கட்டு அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
குறிப்பாக ஒரு பகுதியை அடைத்துவிட்டு அங்குள்ள சிமெண்டு படிகள் பெயர்த்து எடுக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு கருங்கற்களால் ஆன படிக்கட்டு அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதுகுறித்து கோவில் அதிகாரி ஒருவர் கூறும்போது, ரூ.50 லட்சத்தில் புதிய படிக்கட்டுகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிந்தவுடன் பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றார்.