கோத்தகிரி நேரு பூங்காவில் சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் தாமதம் காட்டெருமைகள் தொல்லையால் பொலிவிழந்த பூங்கா
கோத்தகிரி நேரு பூங்காவில் சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் மிகவும் தாமதமாக நடைபெற்று வருகிறது. மேலும், காட்டெருமைகள் பூங்காவிற்குள் புகுந்து மலர் செடிகள் மற்றும் புல் தரைகளை சேதப்படுத்தி வருவதால் பூங்கா பொலிவிழந்து காணப்படுகிறது.
கோத்தகிரி
கோத்தகிரி நேரு பூங்காவில் சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் மிகவும் தாமதமாக நடைபெற்று வருகிறது. மேலும், காட்டெருமைகள் பூங்காவிற்குள் புகுந்து மலர் செடிகள் மற்றும் புல் தரைகளை சேதப்படுத்தி வருவதால் பூங்கா பொலிவிழந்து காணப்படுகிறது.
நேரு பூங்கா
கோத்தகிரி நகரின் மையப்பகுதியில் உள்ள நேரு பூங்கா கோத்தகிரியில் உள்ள சுற்றுலாத்தலங்களில் முக்கியமான ஒன்றாக உள்ளது. இந்தப் பூங்காவில் அழகிய புல் தரைகள் ரோஜா பூந்தோட்டம், வண்ண மலர்கள், சிறுவர் விளையாட்டு பூங்கா, நூற்றாண்டு பழமை வாய்ந்த கோத்தர் இன மக்களின் குல தெய்வமான அய்யனோர் அம்மனோர் கோவில் ஆகியவை அமைந்துள்ளன.
இந்தப் பூங்காவில் கடந்த மே மாதத்தில் கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக தோட்டக்கலை துறை சார்பில் 2 நாட்கள் காய்கறி கண்காட்சி நடைபெற்றது. காய்கறி கண்காட்சியை ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கண்டுகளித்துச் சென்றனர். இந்தநிலையில் கோடை சீசனுக்கு முன்னதாக சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் பூங்காவை மேம்படுத்த பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்து, அதற்காக 15-வது நிதிகுழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.55 லட்சம் ஒதுக்கீடு செய்தது.
பாதுகாப்பு சுவர்
இதன்படி பூங்காவை சுற்றிலும் பாதுகாப்பு சுவர் அமைத்தல், பூங்கா நுழைவு வாயிலில் டிக்கெட் கவுண்டர் மற்றும் கடைகள் அமைத்தல், பூங்காவின் நுழைவு வாயில் பகுதியில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் அழகிய நீரூற்று அமைத்தல், சிறுவர் விளையாட்டு பூங்காவில் குழந்தைகளுக்கான கூடுதல் விளையாட்டு உபகரணங்களை அமைத்தல், பூங்கா கழிப்பிடத்தை பராமரித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு கடந்த மார்ச் மாதம் பணிகள் தொடங்கின.
ஆனால் பூங்காவின் மையப் பகுதியில் 2020- 21 ஆண்டிற்கான 15- வது நிதிகுழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் செலவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் செயற்கை நீரூற்று அமைக்கும் பணி மட்டுமே காய்கறி கண்காட்சிக்கு சில தினங்களுக்கு முன் நிறைவு பெற்றது.
பணிகள் தாமதம்
ஆனால்சுற்றுச்சுவர் மற்றும் நுழைவு வாயில் அருகே டிக்கெட் கவுண்டர் கட்டும் பணிகள் மிகவும் தாமதமாக நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக பூங்காவிற்குள் காட்டெருமைகள் மற்றும் காட்டுப் பன்றிகள் நுழைந்து புல்தரைகள், மலர்செடிகளை நாசம் செய்து வருகின்றன. எனவே 2-வது சீசனுக்காக பூங்காவில் மலர் நாற்றுக்கள் நடவு செய்யும் பணிகள் தடைபட்டு வருவதுடன், பூங்கா பொலிவிழந்து காணப்படுகிறது. இதனால் 2-வது சீசனுக்கு பூங்கா தயாராகுமா? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் பாதுகாப்புச் சுவர் கட்டும் பணிக்காக செங்கற்கள் நடைபாதையில் குவித்து வைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் மற்றும் பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் போக்குவரத்து நெரிசல் மிக்க சாலையில் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.
எனவே பூங்கா மேம்பாட்டுப் பணிகள் மற்றும் சுற்றுப்புற சுவர் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.