ரூ.26 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் நெல் குடோன் கட்டும் பணி
ரூ.26 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் நெல் குடோன் கட்டும் பணி
எடமணல் கிராமத்தில் ரூ.26 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் நெல் குடோன் கட்டும் பணியை கலெக்டர் லலிதா ஆய்வு செய்தார்.
ஆய்வு
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம் திருக்கருகாவூர், வடகால், எட மணல் ஆகிய ஊராட்சிகளில் அங்கன்வாடி கட்டிடம் மற்றும் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்ட பணிகள், கிராம சாலை, மின்சாரம், குடிநீர் குறித்து வளர்ச்சி பணிகளையும், எடமணல் கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சார்பில் கட்டப்படும் நெல் சேமிப்பு கிடங்கு கட்டும் பணியையும், அப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தையும் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியத்தில் திருக்கருகாவூர், எடமணல் ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்துள்ளோம். மேலும் ஆவாஸ் பிளஸ் வீடு கட்டும் பணி நடைபெறுகிறது. அதனை விரைவில் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஊராட்சிகளில் சாலை, குடிநீர், மயான கொட்டகை குறித்து வளர்ச்சி பணிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
நெல் சேமிப்பு கிடங்கு
தமிழக முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் எடமணல் கிராமத்தில் ரூ. 26 ஆயிரம் கோடி மதிப்பில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் 25 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நெல் சேமிப்பு கிடங்கு கட்டப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் எடமணல், திருக்கருக்காவூர், அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்து அங்கு பயின்று வரும் குழந்தைகளிடம் அங்கு செயல்படும் முறைகள் குறித்தும், குழந்தைகளின் கல்வித்திறன் குறித்தும் ஆய்வு செய்தார். தொடர்ந்து அங்கன்வாடியில் சமைக்கப்படும் உணவுகளை கலெக்டர் சாப்பிட்டு பார்த்து அங்கன்வாடி ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
மரக்கன்றுகள் நட்டார்
பின்னர் எடமணல் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பின்புறத்தில் காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் மரங்களை நட்டு வைத்தார். ஆய்வின்போது கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி, ஒன்றிய பொறியாளர்கள் பலராமன், பூரண சந்திரன், தாரா, ஊராட்சி மன்ற தலைவர்கள் பரிமளா செல்வராஜ், சத்யா உதயகுமார், ஒன்றியக்குழு உறுப்பினர் சுகன்யா, பிரேம்குமார், பணி மேற்பார்வையாளர் மனோகரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.