திருத்தணி முருகன் கோவிலில் ராஜகோபுரத்தையும் மாடவீதியையும் இணைக்கும் படிக்கட்டுகள் அமைக்கும் பணி தீவிரம்
திருத்தணி முருகன் கோவிலில் ராஜகோபுரத்தையும் மாடவீதியையும் இணைக்கும் படிக்கட்டுகள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
முருக பெருமானின் அறுப்படை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக திகழ்வது திருத்தணி முருகன் கோவில். இந்த கோவிலில் உள்ள 9 நிலை கிழக்கு ராஜகோபுரம் கட்டும் பணிகள் நிறைவடைந்து ஒன்றரை ஆண்டுக்கு மேல் ஆனது. ஆனால் கிழக்கு ராஜகோபுரத்தில் இருந்து மாடவீதியினை இணைக்கும் 56 படிகள் அமைக்கப்படாமல், பணிகள் கிடப்பில் போடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ராஜகோபுரத்தையும், மாடவீதியையும் இணைக்கும் வகையில் ரூ.92 லட்சம் செலவில் 56 படிகள் அமைக்கும் பணியை கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இதனையடுத்து பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
தற்போது, முருகன் கோவில் ராஜகோபுரத்தையும், மாடவீதியையும் இணைக்கும் படி பாதைகளை மண் நிரப்பி சமன் செய்யும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. அடுத்தக்கட்டமாக படிகள் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. 3 மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.