ரூ.31¼ கோடியில் தொழில்நுட்ப பூங்கா கட்டுமான பணிகள்
வேலூர் அருகே ரூ.31¼ கோடியில் தொழில்நுட்ப பூங்கா கட்டுமான பணிகளை கலெக்டர், எம்.எல்.ஏ. ஆய்வு செய்தனர்.
வேலூரை அடுத்த அப்துல்லாபுரம் அரசு தொழில்பயிற்சி நிலையம் அருகே சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் ரூ.31 கோடியே 36 லட்சத்தில் சிறிய தொழில்நுட்ப பூங்கா கட்டுவதற்கு கடந்த பிப்ரவரி மாதம் 18-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினர். இங்கு தரைத்தளம் மற்றும் 4 மேற்தளங்களுக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தொழில்நுட்ப பூங்கா கட்டுமான பணிகளை வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன், ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது அவர்கள் கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை, முடிவடையும் காலம் குறித்து ஒப்பந்ததாரரிடம் கேட்டறிந்தனர். பின்னர் பணிகளை விரைந்து முடித்து அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
ஆய்வின்போது பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சங்கரலிங்கம், செயற்பொறியாளர் ஜெயராமன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.