வேலூர்-பெங்களூரு சாலையில் தற்காலிக பாலம் அமைக்கும் பணி தீவிரம்
மாங்காய் மட்டி அருகே வேலூர்-பெங்களூரு சாலையில் தற்காலிக பாலம் அமைக்கும் பணி ரூ.2 கோடியில் நடைபெறுகிறது.
வேலூர் நகரின் முக்கிய சாலைகளில் வேலூர்-பெங்களூரு சாலையும் ஒன்றாகும். இந்த சாலையில் மாங்காய் மண்டி அருகே நிக்கல்சன் கால்வாயில் சிறிய பாலம் உள்ளது. வேலூர் சேண்பாக்கம், கொணவட்டம், கருகம்புத்தூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வேலூருக்கு வந்து செல்வதற்கு இந்த பாலத்தை தான் பயன்படுத்தி வருகிறார்கள்.
அதேபோன்று பெங்களூரு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, பள்ளிகொண்டா, குடியாத்தம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் இந்த பாலம் வழியாக சென்று வருகின்றன. வானகங்கள் அதிகரிப்பு காரணமாக பாலம் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எனவே அந்த பாலத்தை அகற்றிவிட்டு புதிதாக பெரிய பாலம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் அந்த பகுதியில் ரூ.2 கோடியில் புதிதாக பாலம் மற்றும் சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி தற்போது இருக்கும் பாலம் அருகே தற்காலிக பாலம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், தற்காலிக பாலம் அமைக்கும் பணிகள் ஓரிரு நாளில் நிறைவுபெறும். அதன்பின்னர் அதன் வழியாக வாகனங்களை இயக்கி சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்படும். அதைத்தொடர்ந்து தற்காலிக பாலம் வழியாக பாலம் செல்வதற்கு அனுமதிக்கப்படும். இதையடுத்து பழைய பாலம் இடித்து அகற்றப்பட்டு அங்கு புதிய பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்படும் என்றனர்.