அண்ணா மார்க்கெட் வியாபாரிகளுக்கு தற்காலிக கடை அமைக்கும் பணி


அண்ணா மார்க்கெட் வியாபாரிகளுக்கு தற்காலிக கடை அமைக்கும் பணி
x

கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் அண்ணா மார்க்கெட் வியாபாரிகளுக்கு தற்காலிக கடை அமைக்கும் பணி நடக்கிறது. இந்த பணியை கலெக்டர் அருண்தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கடலூர்

கடலூர் மஞ்சக்குப்பம் அண்ணா மார்க்கெட், திருப்பாதிரிப்புலியூர் பான்பரி மார்க்கெட், முதுநகர் பக்தவச்சலம் மார்க்கெட் ஆகிய 3 மார்க்கெட்டுகளையும் இடித்து விட்டு, சுமார் ரூ.18 கோடி செலவில் புதிதாக கட்டப்பட இருக்கிறது. இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால், அந்தந்த மார்க்கெட் அருகிலேயே தற்காலிக கடைகள் அமைத்து தர வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்ற மாநகராட்சி நிர்வாகம், அண்ணா மார்க்கெட்டில் உள்ள கடைகளை மஞ்சக்குப்பம் மைதானத்திற்கும், பான்பரி மார்க்கெட்டில் உள்ள கடைகளை அங்குள்ள மீன் மார்க்கெட் மற்றும் உழவர் சந்தை அருகிலும், முதுநகர் பக்தவச்சலம் மார்க்கெட்டை பழைய போலீஸ் நிலையம் அருகிலும் தற்காலிகமாக இடம் மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டது.

கலெக்டர் ஆய்வு

இந்நிலையில் நேற்று கடலூர் அண்ணாமார்க்கெட் கடைகளை மஞ்சக்குப்பத்தில் இடமாற்றம் செய்வதற்கான பணிகள் தொடங்கியது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வியாபாரிகளுக்கு தேவையான கடைகளை விரைவாக அமைத்து, அவர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று மாநகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் மாநகராட்சியில் நடக்கும் பணிகளையும், புதிதாக கட்ட இருக்கும் மார்க்கெட்டுகளையும் தரமாக செய்து முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். ஆய்வின் போது ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, பொறியாளர் மாலதி, உதவி பொறியாளர் மகாதேவன் உடனிருந்தனர்.


Next Story