சிமெண்டு சாலை அமைப்பதற்காக குடிநீர் குழாய் மாற்றி அமைக்கும் பணி
திருவண்ணாமலை மாட வீதியில் சிமெண்டு சாலை அமைப்பதற்காக குடிநீர் குழாய் மாற்றி அமைக்கும் பணியை நகரமன்ற தலைவர் நிர்மலாவேல்மாறன் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றி தேரோடும் மாடவீதியில் சிமெண்டு சாலை அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
முதற்கட்டமாக பே கோபுரத் தெரு, பெரிய தெருவில் நெடுஞ்சாலைத்துறை மூலம் சிமெண்டு சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக அந்த பகுதியில் பக்க கால்வாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக அந்த பகுதியில் ரூ.3 கோடியே 17 லட்சம் மதிப்பில் பழைய குடிநீர் குழாய்களை மாற்றி புதிதாக குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதற்கட்டமாக பெரிய தெருவில் பழைய பிரதான குடிநீர் குழாய் லைனை அகற்றி விட்டு புதிய குழாய் அமைக்கும் பணி முடிக்கப்பட்டு தொடர்ந்து பே கோபுரத் தெருவில் இப்பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
இந்த குடிநீர் குழாய் அமைக்கும் பணியை திருவண்ணாமலை நகரமன்றத் தலைவர் நிர்மலா வேல்மாறன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது நகராட்சி ஆணையாளர் தட்சிணாமூர்த்தி, முன்னாள் நகரமன்ற உறுப்பினர் கார்த்திவேல்மாறன், பொறியாளர் நீலேஸ்வரர் உள்பட பலர் உடனிருந்தனர்.