பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்து கட்டிட தொழிலாளி பலி
எடக்காடு அருகே பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்து கட்டிட தொழிலாளி பலியானார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
மஞ்சூர்
எடக்காடு அருகே பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்து கட்டிட தொழிலாளி பலியானார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
கட்டுமான பணி
சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 25). கட்டிட தொழிலாளி. நீலகிரி மாவட்டம் மஞ்சூரை அடுத்த எடக்காடு பகுதியில் தங்கியிருந்து, அதே பகுதியில் செல்போன் கோபுரம் அமைப்பதற்காக கான்கிரீட் தளம் கட்டும் பணியில் ஈடுபட்டு வந்தார். அவருடன், மேட்டூர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன், பாபு, செல்வம் ஆகியோரும் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் கான்கிரீட் தளம் அமைக்கும் வேலைக்கு மணிகண்டன் உள்பட 4 பேரும் டிராக்டரில் சென்று கொண்டு இருந்தனர். டிராக்டரை செல்வம் ஓட்டினார். அவரது அருகில் மற்ற 3 பேரும் அமர்ந்திருந்தனர்
பள்ளத்தில் கவிழ்ந்தது
எடக்காடு அருகே கவுண்டம்பாளையம் பகுதியில் சென்று கொண்டு இருந்தபோது சாலையோரம் கல் இருந்ததால் அதன் மீது டயர் ஏறாமல் இருக்க டிராக்டரை இடதுபுறமாக செல்வம் திருப்பினார். அப்போது நிலைதடுமாறிய டிராக்டர் சாலையோரம் இருந்த 10 அடி பள்ளத்திற்குள் தலைகீழாக கவிழ்ந்து உருண்டது.
இந்த விபத்தில் சிக்கி 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர். மேலும் வலியால் கூச்சல் போட்டனர். இதை கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து, அவர்களை மீட்டு ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சிகிச்சை பலனின்றி...
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 3 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து மஞ்சூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.