ஆற்றுக்குள் தூக்கி வீசப்பட்ட கட்டிட தொழிலாளி சாவு


ஆற்றுக்குள் தூக்கி வீசப்பட்ட கட்டிட தொழிலாளி சாவு
x

தக்கலை அருகே சாலையோர தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் ஆற்றுக்குள் தூக்கி வீசப்பட்ட கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

கன்னியாகுமரி

தக்கலை:

தக்கலை அருகே சாலையோர தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் ஆற்றுக்குள் தூக்கி வீசப்பட்ட கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

கட்டிட தொழிலாளி

தக்கலை அருகே உள்ள மணக்காவிளை பகுதியை சேர்ந்தவர் மரியசிபு (வயது 32). கட்டிட சென்டிரிங் தொழிலாளி. இவருடைய மனைவி ரம்யா (25). இவர்களுக்கு ரத்திக் சைரோன் (3), பேன்டினோ ரிக்சன் (1) என 2 மகன்கள் உள்ளனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு மரியசிபு புதிதாக மோட்டார் சைக்கிள் வாங்கினார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வேலை விஷயமாக தக்கலைக்கு செல்வதாக மனைவியிடம் கூறி விட்டு வீட்டில் இருந்து புதிதாக வாங்கிய மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

சாலையோரம் கிடந்த மோட்டார் சைக்கிள்

பின்னர் இரவு வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த மரியசிபுவின் உறவினர்கள் அவர் சென்ற பாதை வழியாக சென்றனர்.

குமாரபுரத்தில் உள்ள கொற்றிக்கோடு போலீஸ் நிலையத்தை தாண்டி சென்ற போது சாலையின் ஒரு புறம் மரியசிபுவின் மோட்டார் சைக்கிளும், மற்றொருபுறம் அவருடைய ஹெல்மெட்டும் சேதமடைந்த நிலையில் கிடந்தது. ஏதோ விபத்து நடந்துள்ளது என்பதை உணர்ந்த அவர்கள் பதற்றம் அடைந்தனர்.

ஆற்றில் பிணமாக மீட்பு

பின்னர் மரியசிபுவை சாலையோரம் உள்ள ஆறு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் இதுபற்றி தகவல் அறிந்த போலீசாரும் விரைந்து வந்து தேடியும் ஒரு முன்னேற்றமும் தென்படவில்லை. இரவு வெகுநேரமானதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.

இந்தநிலையில் நேற்று காலையில் மீண்டும் உறவினர்கள், போலீசார் வந்து தேடினர். அப்போது சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சிறிது தொலைவில் ஆற்று பாலத்தின் கீழ் மரியசிபு முகத்தில் படுகாயங்களுடன் பிணமாக கிடந்தார். இதனை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

விபத்து நடந்தது எப்படி?

பின்னர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள், ஹெல்மெட் மற்றும் மரியசிபு பிணமாக கிடந்ததை வைத்து நடத்திய விசாரணையில், சாலையோர இரும்பு தடுப்பு கம்பியில் மோட்டார் சைக்கிள் மோதியதில் மரியசிபு தூக்கி ஆற்றுக்குள் வீசப்பட்டிருக்கலாம் என்றும், இதனால் அவர் முகத்தில் படுகாயம் ஏற்பட்டு தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம். பின்னர் அவர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு உடல் ஒதுங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மோட்டார் சைக்கிள் சாலையோர தடுப்பில் மோதி ஆற்றுக்குள் தூக்கி வீசப்பட்டதில் கட்டிட தொழிலாளி பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story