கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் உயர்த்தி வழங்கக்கோரி கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்ட கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் சார்பில் திருவண்ணாமலை காந்தி நகரில் நல வாரியம் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார்.
இதில் கட்டுமான தொழிலாளர்களுக்கு 2023-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தரமான வேட்டி, சேலை பொங்கல் தொகுப்பு, ஊக்கத்தொகை ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்.
விசாரணை என்ற பெயரில் ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது. கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.
ஜி.எஸ்.டி. வரிகளை குறைக்க வேண்டும். கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் உயர்த்தி வழங்க வேண்டும். திருமண உதவித் தொகை ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதில் கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.