சென்னையில் ஆலோசனை: மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு


சென்னையில் ஆலோசனை: மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு
x

மக்கள் இயக்க நிர்வாகிகளை நடிகர் விஜய் சந்தித்து பேசினார்.

சென்னை,

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா? என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவுகிறது. ரசிகர்களும் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்கள். ஏற்கனவே தனது ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கம் என்று பெயரில் மாற்றி மாவட்டந்தோறும் ஏழைகளுக்கு தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடுகள் செய்துள்ளார். விஜய் சினிமாவை விட்டு விலகி ஒருவருடம் அரசியல் பணிகளில் ஈடுபட இருப்பதாகவும், அடுத்த சட்டமன்ற தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது. ஆனால் இதனை விஜய் தரப்பில் மறுத்தனர்.

சமீபத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளை விஜய் நேரில் அழைத்து பரிசுகள் வழங்கி பாராட்டி கவுரவித்தார். காமராஜர், அம்பேத்கர், பெரியார் போன்ற தலைவர்களை பற்றி படிக்க அறிவுறுத்தினார். இதன் மூலம் இளைய தலைமுறையினரை குறிவைத்து விஜய் தனது அரசியல் காய்களை நகர்த்துவதாக பல தரப்பிலும் பேசினர்.

நிர்வாகிகளுடன் ஆலோசனை

இந்த நிலையில் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை நேற்று திடீரென்று சந்தித்தார். சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடந்தது. இதில் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், மாவட்ட தலைவர்கள், இளைஞர் அணி, தொண்டர் அணி, மாணவர் அணி, விவசாய அணி, மகளிர் அணி, தொண்டர் அணி நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.

அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 350 நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். கூட்டதில் விஜய் மக்கள் இயக்க பணிகள் குறித்து கேட்டு அறிந்ததாகவும், சிலர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்று விருப்பும் தெரிவித்ததாகவும் இணைய தளங்களில் தகவல் பரவியது.

நிர்வாகிகளுக்கு பாராட்டு

இந்த சந்திப்பு குறித்து விஜய் மக்கள் இயக்க நிர்வாகி ஒருவர் கூறும்போது, "கடந்த மாதம் மாணவர்கள் கவுரவிப்பு விழாவில், மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரை பத்திரமாக அழைத்து வந்த நிர்வாகிகளை பாராட்டுவற்கும் நன்றி தெரிவிப்பதற்குமே இந்த சந்திப்பு நடந்தது. நிர்வாகிகளை விஜய் தனித்தனியாக சந்தித்து நன்றி தெரிவித்ததோடு அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். மதிய விருந்தும் பரிமாறினார்'', என்றார்.

மேலும் விடுபட்ட திருவண்ணாமலையை சேர்ந்த 10-வது வகுப்பு மாணவி உதயாவுக்கும் நேற்று சான்றிதழ் மற்றும் பரிசுகளை விஜய் வழங்கினார். இந்த கூட்டம் சுமார் 3 மணி நேரம் நடந்தது.


Next Story