கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்: நமக்கு நாமே திட்டத்தில் ரூ.6¼ கோடியில் வளர்ச்சி பணிகள்-கலெக்டர் கார்மேகம் தகவல்
நமக்கு நாமே திட்டத்தில் ரூ.6¼ கோடியில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
ஆலோசனை கூட்டம்
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நமக்கு நாமே திட்டம் பொதுமக்களின் பங்களிப்புடன் செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் 2021-2022 நிதி ஆண்டில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சேலம் மாநகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் பற்றியும், 2022-2023-ம் நிதி ஆண்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 2021-2022-ல் மழைநீர் வடிகால், கூடுதல் வகுப்பறை கட்டிடம், குடிநீர் விஸ்தரிப்பு பணிகள், சாலைப்பணிகள் என 22 பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு 20 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.
ரூ.6.27 கோடியில் பணிகள்
இதில் பொதுமக்கள் பங்களிப்பாக ரூ.1.20 கோடியும், அரசின் பங்கு தொகையாக ரூ.2.40 கோடியும் பெறப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதேபோன்று 2022-2023-ல் பொதுமக்களின் பங்களிப்பாக ரூ.2.9 கோடியும், அரசின் பங்கு தொகையாக ரூ.4.18 கோடி என ரூ.6.27 கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கார்மேகம் பேசியதாவது:-
நமக்கு நாமே திட்டம் கிராமப்புறங்களில் செயல்படுத்தப்பட்டு பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோன்று நகர்ப்புறங்களிலும் பொதுமக்களின் பங்களிப்புடன் வளர்ச்சித்திட்டப்பணிகள் மேற்கொள்ளும் வகையில் மாநகராட்சி பகுதியில் உள்ள பல்வேறு அமைப்புகளை சார்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் ஆகியோருடன் தொடர்ந்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொதுமக்களின் பங்களிப்பு
பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றிட ஒருபங்கு நிதி அளித்தால். அரசு இரண்டு பங்கு தொகையும், பொதுமக்கள் 50 சதவீதத்திற்கு மேல் அல்லது முழு தொகையையும் செலுத்தினால் அவர்களே அந்தப் பணிகளை மேற்கொள்ளலாம். குறிப்பிட்ட பணிகளுக்கு மட்டும் அல்லாது பொதுவாக பங்களிப்பை பொதுமக்கள் வழங்கலாம். பொதுமக்களால் வழங்கப்படும் பங்களிப்பு தொகைக்கு ஏற்றவாறு பணிகளை மாநகராட்சி நிர்வாகம் முறைப்படுத்தி மேற்கொள்ளும். எனவே இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள பல்வேறு சங்க நிர்வாகிகள், அமைப்பை சார்ந்தவர்கள் மாநகராட்சியின் வளர்ச்சிக்கு தங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாநகர பொறியாளர் ரவி, மாநகர நல அலுவலர் யோகானந், செயற் பொறியாளர்கள் பழனிசாமி, ராஜேந்திரன், பள்ளி மற்றும் கல்லூரி கல்வி நிறுவனங்கள், தங்கும் விடுதி மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள், மரம்- ஓடு- மூங்கில் வியாபாரிகள் சங்கங்கள், அனைத்து வணிகர்கள் சங்கம், அரிமா சங்கம், குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள், திருமண மண்டப நிர்வாகிகள், சூப்பர் மார்க்கெட் நிர்வாகிகள், தனியார் மருத்துவமனை உரிமையாளர்கள், லாரி உரிமையாளர்கள், ஹார்டுவேர்ஸ் உரிமையாளர்கள் மற்றும் அனைத்து தொழில் சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.