கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் ஆலோசனை கூட்டம்
முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவையொட்டி ராமநாதபுரத்தில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
குருபூஜை விழா
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்த நாள் மற்றும் குருபூஜை விழா வருகிற 27-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை கமுதி அருகே பசும்பொன்னில் நடைபெற உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் தொடர்பான அரசு அலுவலர்கள், அரசியல் கட்சியினர், சமுதாய அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் ராமநாதபுரத்தில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கலெக்டர் கூறியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு உள்ளதால் குருபூஜை விழாவுக்கு வாடகை வாகனங்கள், இருசக்கர வாகனம், டிராக்டர், ஆட்டோ, திறந்த வெளி வாகனங்கள் மற்றும் நடைபயணமாக வர அனுமதி கிடையாது. சொந்த வாகனங்களில் வருவோர் வாகனத்தின் உரிமையாளர் பெயர், அதில் பயணம் செய்பவர்கள், வாகனத்தின் பதிவு எண் அதன் ஓட்டுநர் போன்ற விவரங்களை போலீஸ் நிலையத்தில் முன்கூட்டியே தெரிவித்து, அங்கே தரப்படும் அனுமதி சீட்டினை வாகனத்தின் முன்புற கண்ணாடியில் ஒட்டியிருக்க வேண்டும்.
வரையறுக்கப்பட்ட வழித்தடங்கள்
வாகனத்தில் ஒலி பெருக்கிகள், சாதி, மத உணர்வுகளை தூண்டும் பேனர்களை கட்டி வரவோ, கோஷங்களை எழுப்பவோ கூடாது. சொந்த வாகனத்தை வாடகைக்கு விடக்கூடாது. வாகன உரிமையாளர் தணிக்கையின் வாகனத்தில் இருக்க வேண்டும். மது பாட்டில்கள், ஆயுதங்கள் எடுத்து செல்லக்கூடாது. வெடி வெடிக்க கூடாது.
பிற மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள் அந்தந்த மாவட்டங்களில் முறையான அனுமதி பெற வேண்டும். மாவட்ட நிர்வாகத்தால் வரையறுக்கப்பட்டுள்ள வழித்தடங்களிலேயே வந்து செல்ல வேண்டும். மாவட்ட நிர்வாகத்தால் தடை செய்யப்பட்டுள்ள வழித்தடங்களில் செல்லக்கூடாது.
சட்டம், ஒழுங்கு
அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் 29 மற்றும் 30-ந் தேதிகளில் கமுதிக்கு கூடுதல் பஸ் வசதி செய்து தரப்படும். அஞ்சலி செலுத்த வரும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள், அமைப்புகளின் தலைவர்களுக்கு நேரம் ஒதுக்கீடு செய்யப்படும். சட்டம், ஒழுங்கு பிரச்சினை நடைபெறாமல் விழா நடைபெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, உதவி கலெக்டர் சிவானந்தம், நேர்முக உதவியாளர் கண்ணா கருப்பையா, ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.