ஊராட்சி மன்ற பெண் தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்
ஊராட்சி மன்ற பெண் தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் ஊராட்சி மன்ற பெண் தலைவர்களுக்கான ஊராட்சி நிர்வாகம் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது.கிராம ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற பெண் தலைவர்களுக்கு சிறந்த முறையில் ஊராட்சி நிர்வாகம் நடத்துவதற்காகவும், சுதந்திரமாக செயல்படுவதற்கும், ஊராட்சி நிர்வாகம் குறித்து எழும் சந்தேகங்களுக்கு உரிய முறையில் விளக்கம் அளித்திடவும், அரசின் நலத்திட்டங்கள் ஊராட்சியின் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடையும் வண்ணம் எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், அனைத்து ஊராட்சிகளிலும் சர்வதேச சிறுதானிய ஆண்டு 2023 கொண்டாடப்படுவதை ஒட்டி, வேளாண்மைத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து விவசாயிகள் சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க ஊக்குவிக்கப்பட வேண்டும். மீண்டும் மஞ்சப்பை உபயோகிக்க பொது மக்களை ஊக்கப்படுத்த வேண்டும்.
கிராம ஊராட்சிகளில் கோடை காலத்தில் ஏற்படும் குடிநீர் பற்றாக்குறை போக்க அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி சுத்தம் செய்தல், குளோனேஷன் செய்யப்பட்ட குடிநீர் வழங்குதல், தெரு விளக்குகள் பராமரித்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தங்களின் அதிகாரத்தை பற்றி முழுமையாக தெரிந்துகொண்டு செயல்படவேண்டும். பெண் தலைவர்கள் தங்களது கணவர், உறவினர்கள் தலையீடு இல்லாமல் சுதந்திரமாகவும், தன்னிச்சையாகவும் ஊராட்சியில் நிர்வாகம் நடத்திட வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.