பெண் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு கலந்தாய்வு கூட்டம்
வேலூர் மாவட்ட பெண் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பெண் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, துணை கலெக்டர் (பயிற்சி) பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், கிராம சாலைகள், பாலங்கள் அமைத்தல், பழுதுபார்த்தல், பராமரித்தல் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும் மரக்கன்றுகள் நட்டு பராமரித்தல், தெருவிளக்குகள் அமைத்தல், விளையாட்டு மைதானம், பூங்கா, உடற்பயிற்சி கூடங்கள் அமைத்தல் போன்றவை குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும் பிளாஸ்டிக் தவிர்த்து, மஞ்சப்பை பயன்படுத்த மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கலெக்டர் கூறினார். கூட்டத்தில் பெண் ஊராட்சி மன்ற தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்துக்கு பின்னர் உலக ரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் 4 முறைக்கு மேல் ரத்ததானம் செய்த 53 தன்னார்வ ரத்த கொடையாளார்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.