நிலுவை தொகை வழங்குவது குறித்து கருத்து கேட்பு கூட்டம்
கூடலூர் தனியார் எஸ்டேட் தொழிலாளர்களுக்கு நிலுவை தொகை, பணப்பலன்கள் வழங்குவது குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.
கோத்தகிரி,
கூடலூர் தனியார் எஸ்டேட் தொழிலாளர்களுக்கு நிலுவை தொகை, பணப்பலன்கள் வழங்குவது குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.
கருத்து கேட்பு கூட்டம்
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே 1,500 தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்த தனியார் தேயிலை எஸ்டேட் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டது. இதையடுத்து அந்த தொழிலாளர்கள் தங்களுக்கு வழங்க வேண்டிய சம்பள பாக்கி, வைப்பு நிதி, நிலுவை தொகை உள்ளிட்ட பண பலன்களை வட்டியுடன் வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஐ.என்.டி.யு.சி. மற்றும் தோட்ட தொழிலாளர் சங்கம் (பி.எல்.ஓ) சார்பில் கடந்த 2006-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதியான அபய் மனோகர் சப்ரேவை ஒரு நபர் விசாரணை கமிஷனாக நியமித்து, இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டது. விசாரணை கமிஷன் பல்வேறு விசாரணைகள் நடத்திய பிறகு எஸ்டேட்டில் பணிபுரிந்த தோட்ட தொழிலாளர்கள், தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் கருத்து கேட்பு கூட்டம் கூடலூரில் உள்ள ஐ.என்.டி.யு.சி. அலுவலகத்தில் நடைபெற்றது.
விசாரணை கமிஷன்
கூட்டத்தில் ஒரு நபர் விசாரணை கமிஷனின் பிரதிநிதிகளான உணவு மற்றும் விவசாயத்திற்கான சர்வதேச ஒன்றியத்தின் தலைவர் டெல்லியை சேர்ந்த அனுராதா சல்வார் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு மூத்த சட்ட ஆலோசகர் வக்கீல் கார்த்தியாயினி ஆகியோர் கலந்துகொண்டு எஸ்டேட்டில் பணிபுரிந்த தொழிலாளர்கள் மற்றும் ஐ.என்.டி.யு.சி. தலைவர் முகமது மற்றும் தோட்ட தொழிலாளர் சங்க தலைவர் சையது முகமது, ஐ.என்.டி.யு.சி. செயல் தலைவர் பாலசுந்தரம், பொது செயலாளர்கள் ராஜகோபால், ராமலிங்கம், ராமகிருஷ்ணன் ஆகியோர் உள்பட பல்வேறு தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் கருத்துகளை கேட்டறிந்தனர்.
மனு தாக்கல் செய்யப்படும்
மேலும் அவர்கள் கூறும்போது, நீலகிரி மாவட்டத்தில் நலிவடைந்த தேயிலை எஸ்டேட்டுகளில் இதுபோன்ற புகார்கள் ஏதேனும் இருப்பின் ஜனவரி மாத இறுதியில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்படும் எனவும், பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கத்தின் கருத்துகள் குறித்த விரிவான அறிக்கை ஒரு நபர் விசாரணை கமிஷன் நீதிபதியிடம் சமர்ப்பிக்கப்படும் என்றனர். கூட்டத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.