விநாயகர் சிலை ஊர்வலம் குறித்த ஆலோசனை கூட்டம்
விநாயகர் சிலை ஊர்வலம் குறித்த ஆலோசனை கூட்டம்
மன்னார்குடி
மன்னார்குடியில் விநாயகர் சிலை ஊர்வலம் குறித்த ஆலோசனை கூட்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசந்திரன் தலைமையில் நடந்தது.
விநாயகர் சதுர்த்தி விழா
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந் தேதி (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. விழாவை முன்னிட்டு இந்து முன்னணி அமைப்பு சார்பில் பல்வேறு வகையான விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு, பின்னர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம்.
அதன்படி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் விநாயகர் சிலைகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிரதிஷ்டை செய்யப்பட்டு அடுத்தமாதம்(செப்டம்பர்) 3-ந்தேதி மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் இருந்து தொடங்கும் விநாயகர் சிலை ஊர்வலம் கோவிலின் நான்கு வீதிகள் வழியாக வலம் வந்து பந்தலடி, கீழபாலம் வழியாக சேரங்குளம் தடுப்பணையில் உள்ள பாமணி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட உள்ளன.
ஆலோசனை கூட்டம்
மன்னார்குடியில் விநாயகர் சிலை ஊர்வலம் குறித்த ஆலோசனை கூட்டம் துணை சூப்பிரண்டு பாலசந்திரன் தலைமையில் நடைபெற்றது. பின்னர் அவர் பேசுகையில், விநாயகர் சதுர்த்திக்காக மன்னார்குடியில் பல்வேறு பகுதிகளிலும் வைக்கப்படும் விநாயகர் சிலைகளை பாதுகாப்பாக எடுத்து வருவது குறித்தும், ஊர்வலத்தின் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் எடுத்துரைத்தார். இதில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முருகன், வடுவூர் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, நீடாமங்கலம் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்வர், இந்து முன்னணி கட்சியின் மாவட்ட தலைவர் ரமேஷ், மாவட்ட செயலாளர் ராம ராஜசேகர், நகர பொதுச்செயலாளர் கென்னடி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.