மனிதசங்கிலி குறித்த ஆலோசனை கூட்டம்
கும்பகோணத்தில் நடக்க உள்ள மனிதசங்கிலி குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது
கும்பகோணத்தில், மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி வருகிற 11-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) மனித சங்கிலி நடக்கிறது. இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கும்பகோணத்தில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் விவேகானந்தன் தலைமை தாங்கினார். இதில் விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் உறவுழகன், மாநகராட்சி கவுன்சிலர் ரூபினிஷா அலெக்ஸ், நகர செயலாளர் கலையரசன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் பாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மனோகரன், நகர செயலாளர் செந்தில், ம.தி.மு.க. இளைஞரணி மாவட்ட செயலாளர் சரவணன், நகர செயலாளர் செந்தில், எஸ்.டி.பி.ஐ. மாவட்ட செயலாளர் இப்ராஹிம், காங்கிரஸ் நகர தலைவர் மீசாவுதீன், திராவிட கழக மாவட்ட செயலாளர் நிம்மதி, நீலப்புலிகள் கட்சி தலைவர் இளங்கோவன் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வருகிற 11-ந் தேதி சமய நல்லிணக்கத்தை வலியுறுத்தி கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட் பகுதியிலிருந்து தாராசுரம் வரை சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையில் நடக்கும் மனித சங்கிலி போராட்டத்தில் அனைத்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.