சமூக நல்லிணக்க மனித சங்கிலி குறித்து ஆலோசனை கூட்டம்
ராணிப்பேட்டையில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அனைத்து கட்சிசார்பில் வருகிற 11-ந்தேதி 4 மணியளவில் அனைத்து கட்சி சார்பில் நடைபெற உள்ள சமூக நல்லிணக்க மனித சங்கிலி குறித்த ஆலோசனை கூட்டம் ராணிப்பேட்டை முத்துக்கடையில் உள்ள ராணிப்பேட்டை நகர மன்ற துணைத் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் குண்டாசார்லஸ் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் தமிழ் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் காசிநாதன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சங்கர் மேஸ்திரி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி துணை செயலாளரும், நகரமன்ற துணைத் தலைவருமான ரமேஷ் கர்ணா, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் பி.என்.உதயகுமார் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர்.
கூட்டத்தில் ராணிப்பேட்டை, ஆற்காடு, மேல்விஷாரம், வாலாஜா, திமிரி, கலவை ஆகிய 6 இடங்களில் மனித சங்கிலி நடைபெறும் என்றும், அனைத்து கட்சி சார்பிலும் அதிக தொண்டர்கள் கலந்து கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது. முடிவில் ராணிப்பேட்டை தொகுதி செயலாளர் மாந்தாங்கல் ராஜா நன்றி கூறினார்.