பாதாள சாக்கடை திட்டம் குறித்து கருத்து கேட்பு கூட்டம்
அருப்புக்கோட்டையில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்துவது குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டையில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்துவது குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
பாதாள சாக்கடை திட்டம்
அருப்புக்கோட்டை நகராட்சியில் ரூ.375 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்துவது குறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் திட்ட உருவாக்கம் நெல்லை கோட்டம் மூலம் நேற்று பொதுமக்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் நகராட்சி சமுதாய கூடத்தில் நடைபெற்றது. இதில் குடிநீர் வாரிய அதிகாரிகள், நகர்மன்ற தலைவர் சுந்தரலட்சுமி, துணைத்தலைவர் பழனிச்சாமி, நகராட்சி ஆணையாளர் அசோக்குமார், முன்னாள் நகர் மன்ற தலைவர் சிவப்பிரகாசம், நகராட்சி அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கருத்து கேட்பு கூட்டம்
கருத்து கேட்பு கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சார்ந்த நிர்வாகிகள், நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
அப்போது இந்த திட்டத்தை எப்படி செயல்படுத்த போகிறீர்கள்? எவ்வளவு காலங்கள் ஆகும் என பல்வேறு கேள்விகளை எழுப்பினர். மேலும் இந்த திட்டத்தினால் ஏற்படும் சிரமங்களையும் அவர்கள் எடுத்துரைத்தனர். அதற்கு பதில் அளித்த அதிகாரிகள் திட்டம் தொடங்கப்பட்டு 2 ஆண்டுகளுக்குள் முடிக்கப்படும். அனைத்து பகுதிகளிலும் ஆய்வு செய்த பின் தான் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என பதில் அளித்தனர்.
கழிவுநீரை சுத்திகரிப்பதற்கு 3 இடங்களில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, அதனை சுத்திகரிப்பு செய்து விவசாய நிலங்களுக்கு பயன்பெறும் வகையில் நடைமுறைப்படுத்த பட உள்ளது. இதற்கு அனைத்து கட்சியினரும், பொதுமக்களும் உறுதுணையாக இருக்க வேண்டும் என கூட்டத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.