ஆட்டோ டிரைவர்கள், வியாபாரிகளுடன் ஆலோசனை கூட்டம்
கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு ஆட்டோ டிரைவர்கள், வியாபாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையத்தில் ஆட்டோ டிரைவர்கள், மாடவீதியில் சாலையோர கடை வைத்துள்ள நடைபாதை வியாபாரிகள் மற்றும் திருநங்கைகளுடன் தனித்தனியாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், தீபத்திருவிழாவின் போது போலீசார் அளிக்கும் அனுமதி சீட்டுடன் தான் ஆட்டோ ஓட்ட வேண்டும். ஆட்டோ டிரைவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை தவிர மற்ற இடங்களில் ஆட்டோவை ஓட்ட கூடாது. மாவட்ட நிர்வாகத்தினால் அனுமதிக்கப்படும் கட்டணம் மட்டுமே பயணிகளிடம் வசூலிக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது.
வெளி மாநில, மாவட்ட பக்தர்கள் எவரேனும் ஆட்டோவில் பொருட்களை தவறவிட்டு சென்றால் அதனை உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். தீபத்திருவிழா தொடங்கிய நாள் முதல் மாடவீதியில் தரைக்கடைகள் அமைக்கக்கூடாது. பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் கடை அமைக்கக்கூடாது.
பக்தர்களிடம் வற்புறுத்தி திருங்கைகள் பணம் கேட்க கூடாது. வெளியூரில் இருந்து தீபத்திருவிழாவின் போது திருவண்ணாமலைக்கு திருநங்கைகள் வந்தால் அவர்கள் குறித்து உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டது.
கூட்டத்தில் டவுன் நகர போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமாரி, சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம், திருவண்ணாமலை மாவட்ட அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆறுமுகம் மற்றும் அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.