ெரயில்வே வளர்ச்சிப் பணிகள் குறித்து எம்.பி.க்களுடன் ஆலோசனை கூட்டம்
திருச்சியில் ெரயில்வே வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த எம்.பி.க்கள் வலியுறுத்தினார்கள்.
திருச்சியில் ெரயில்வே வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த எம்.பி.க்கள் வலியுறுத்தினார்கள்.
ஆலோசனைக் கூட்டம்
தெற்கு ெரயில்வே சார்பில், திருச்சி ெரயில்வே கோட்டத்துக்குட்பட்ட மாவட்ட பகுதிகளைச் சேர்ந்த எம்.பி.களுடன் ெரயில்வே துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்த வருடாந்திர ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
தெற்கு ெரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் தலைமை தாங்கினார். எம்.பி.க்கள் திருச்சி சிவா (மாநிலங்களவை), திருநாவுக்கரசர் (திருச்சி), எஸ்.எஸ். பழனிமாணிக்கம் (தஞ்சை), கார்த்தி சிதம்பரம் (சிவகங்கை), தொல். திருமாவளவன் (சிதம்பரம்), எஸ். ராமலிங்கம் (மயிலாடுதுறை) வி. வைத்திலிங்கம் (புதுச்சேரி), சி.என். அண்ணாதுரை (திருவண்ணாமலை), எஸ். கல்யாணசுந்தரம் (மாநிலங்களவை), எம்.செல்வராஜ் (நாகப்பட்டினம்), டி.ரவிக்குமார் (விழுப்புரம்) எஸ்.செல்வகணபதி (மாநிலங்களவை) மற்றும் திருச்சி ெரயில்வே கோட்ட மேலாளர் மணீஷ் அகர்வால், தெற்கு ெரயில்வேயின் பல்வேறு துறைகளின் அலுவலர்கள் பலரும் பங்கேற்றனர்.
பயணிகள் வசதிகள்
கூட்டத்தில் தெற்கு ெரயில்வேயின் பொது மேலாளர் ஆர்.என். சிங் தெற்கு ெரயில்வேயின் செயல்பாடுகள், சாதனைகள் மற்றும் பயணிகளின் வசதிகளை மேம்படுத்துவதற்காக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், திருச்சி கோட்டத்தில் நடைபெற்றுள்ள பணிகள் குறித்தும் முன்மொழியப்பட்ட பணிகள் குறித்தும் விவரித்தார்.
புதுச்சேரி மற்றும் கும்பகோணம் ெரயில் நிலையங்கள் மறுசீரமைப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், திருச்சி கோட்டத்தில் தஞ்சாவூர், மயிலாடுதுறை, விழுப்புரம், அரியலூர், லால்குடி, சிதம்பரம், காரைக்கால், ஸ்ரீரங்கம், மன்னார்குடி உள்ளிட்ட 15 ெரயில் நிலையங்கள் அமிர்த் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட உள்ளது என்றார்.
விரைந்து முடிக்க வலியுறுத்தல்
கூட்டத்தில் புதிய ெரயில்கள் அறிமுகம், ஏற்கனவே உள்ள ெரயில்களில் கூடுதல் நிறுத்தங்கள், புதிய ெரயில் பாதைகள் மற்றும் அவற்றின் முன்னேற்றம், தற்போதுள்ள ெரயில் சேவைகளின் விரிவாக்கம், ெரயில் நிலைய மேம்பாட்டு பணிகள், இரட்டிப்பு மற்றும் மின்மயமாக்கல் பணிகள், கட்டுமானம், ெரயில்வே பாலங்களுக்கு அடியில் சாலைகள் அமைத்தல் மற்றும் ெரயில் நிலையங்களில் பயணிகளுக்கு மேம்படுத்தப்பட்ட வசதிகளை வழங்குதல், ெரயில்வே திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்துதல், ெரயில்வே திட்டங்களை விரைந்து முடித்தல் உள்ளிட்ட திருச்சி கோட்டத்தில் ெரயில்வே சேவைகளை மேம்படுத்துதல் தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து எம்.பி.க்கள் ஆலோசனை வழங்கினர்.