மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம்
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
கரூர்,
ஆலோசனை கூட்டம்
கரூர் மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் வழங்குவது குறித்து வங்கியாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குனர் பல்லவி பல்தேவ் கலந்து கொண்டார். மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் வங்கி வாரியாக மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான இலக்கீடு, சுய உதவிக்குழுவிற்கு குறுந்தொழிலுக்கான திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மற்றும் பகுதி அளவிலான கூட்டமைப்புகளுக்கு வங்கி பெறுங்கடன் வழங்குவது குறித்தும், மாவட்ட மற்றும் வட்டார அளவில் நடைபெறும் வங்கியாளர்கள் கூட்டம் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக வழங்கப்பட்ட வங்கி கடன்களை திரும்ப பெறுவது தொடர்பாக சமுதாய அடிப்படையிலான கடன் மீட்பு குழுவை மாதம் ஒரு முறை கூட்டி வராகடன் வசூலிப்பது குறித்தும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குனர் பல்லவி பல்தேவ் ஆலோசனை மேற்கொண்டார்.
ஓரிட சேவை மையம்
மேலும் கரூர் நகரில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் தொழில் முனைவோருக்கு உதவிடும் வகையில் அமைக்கப்பட்ட ஓரிட சேவை மையத்தினை மேலாண்மை இயக்குனர் தொடங்கி வைத்து தொழில் முனைவோர் மற்றும் உற்பத்தியாளர் குழுவினரிடம் அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.அதனைத்தொடர்ந்து அவ்வளாகத்தில் உள்ள வேலை வழங்குவோர், வேலை தேடுவோர்களுக்காக அமைக்கப்பட்ட நகர வாழ்வாதார மையம் பாலம் அலுவலகத்தை பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். முன்னதாக குளித்தலை வட்டாரம், ராஜேந்திரம் ஊராட்சி மற்றும் கிருஷ்ணராயபுரம் வட்டாரம், மாயனூரில் சமுதாய வள பயிற்றுனர்கள், சமுதாய வல்லுனர்கள் மற்றும் உற்பத்தியாளர் குழுக்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.