சுருக்குமடிவலை தொடர்பான ஆலோசனை கூட்டம்
சீர்காழியில் சுருக்குமடிவலை தொடர்பான ஆலோசனை கூட்டம் உதவி கலெக்டர் தலைமையில் நடந்தது.
சீர்காழி:
சீர்காழியில் சுருக்குமடிவலை தொடர்பான ஆலோசனை கூட்டம் உதவி கலெக்டர் தலைமையில் நடந்தது.
சுருக்குமடிவலை
சீர்காழி அருகே பழையார், திருமுல்லைவாசல், வெள்ளைமணல், மடவாமேடு, கொட்டாயமேடு, பூம்புகார், வானகிரி உள்ளிட்ட 14 மீனவ கிராமங்களில் சுருக்கு மடிவலையை பயன்படுத்தி மீன் பிடிதொழில் செய்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக சுருக்குமடி வலையை பயன்படுத்தக் கூடாது என சிறு தொழில் மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாலும், மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின் படி அந்த வலையை பயன்படுத்தக் கூடாது எனவும் ஐகோர்ட்டின் வழக்கின் அடிப்படையாகக் கொண்டு சுருக்குமடி வலை பயன்பாடு முழுவதுமாக நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் சுருக்கு மடி வலையை பயன்படுத்திய மீனவர்கள் நான்கு ஆண்டுகளாக மீன்பிடி தொழில் செய்யவில்லை.
ஆலோசனை கூட்டம்
இதனை எதிர்த்து சுருக்குமடி வலை பயன்படுத்தும் மீனவர்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் தீர்ப்பு வருகிற 2-ந்தேதி அறிவிக்கப்பட உள்ளது.
இதை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் சுருக்கும் மடி வலைகளை பயன்படுத்தும் 14 மீனவ கிராமங்களின் பிரதிநிதிகளை அழைத்து சீர்காழி உதவி கலெக்டர் அலுவலகத்தில் உதவி கலெக்டர் அர்ச்சனா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
சட்டத்தை மதிக்க வேண்டும்
இதில் தீர்ப்பு எப்படி வந்தாலும் அதனை ஏற்று சட்டத்தை மதித்து நடந்து கொள்ள வேண்டும் என மீனவர் பிரதிநிதிகளிடம், உதவி கலெக்டர் அறிவுறுத்தினார். அதனை ஏற்றுக்கொண்ட 14 மீனவ கிராம மீனவப் பிரதிநிதிகள் கோர்ட்டின் தீர்ப்பை ஏற்று சட்டத்தின்படியே மீன்பிடி தொழில் செய்வோம் என உறுதி அளித்தனர்.
இந்த கூட்டத்தில் சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், பொறையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு, மீனவர் சங்க பிரதிநிதிகள் ஜி. என்.ரவி, தனிப்பிரிவு போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.