ஆட்டோக்களை முறைப்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம்
கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி ஆட்டோக்களை முறைப்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி ஆட்டோக்களை முறைப்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்றது.
வட்டார போக்குவரத்து அலுவலர் சிவக்குமார் தலைமை தாங்கி பேசுகையில், தீபத் திருவிழாவையொட்டி ஆட்டோவுக்கு பயண கட்டணம் நிர்ணயிக்கவும், ஒழுங்குபடுத்தவும் கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார். வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் நிர்ணயிக்கப்படும் கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்க கூடாது. பாதி ஆட்டோக்களுக்கு மேல் உரிமம் இல்லாமல் இயக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.
ஓட்டுநர்கள் ஆட்டோக்களுக்கு உரிய அனைத்து ஆவணங்களையும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கொடுத்து ஸ்டிக்கர் வாங்கி செல்ல வேண்டும். இந்த ஸ்டிக்கர் உள்ள ஆட்டோக்கள் மட்டும்தான் தீபத் திருவிழாவின் போது இயக்க வேண்டும். கடந்த தீபத் திருவிழாவின் போது நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் தான் இந்த முறையும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து கலெக்டரிடம் அனுமதி பெற்று அறிவிப்பு வெளியிடப்படும்' என்றார்.
கூட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலரின் நேர்முக உதவியாளர் பொன்.சேகர், திருவண்ணாமலை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துகுமாரி, சப்- இன்ஸ்பெக்டர் அன்புசெல்வம், மோகன், அமைப்புசாரா அனைத்து தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆறுமுகம் உள்பட ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முடிவில் மோட்டார் வாகன முதுநிலை ஆய்வாளர் ஆர்.பெரியசாமி நன்றி கூறினார்.