கும்பாபிஷேக முன்னேற்பாடு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்பு
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா முன்னேற்பாடு குறித்து அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார்.
நாகா்கோவில்,
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா முன்னேற்பாடு குறித்து அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார்.
ஆலோசனை கூட்டம்
திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் அடுத்த மாதம் 6-ந் தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது. இதுதொடர்பாக குமரி மாவட்ட இந்துசமய அறநிலையத்துறை சார்பில் கும்பாபிஷேக விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நாஞ்சில் கூட்டரங்கில் நடந்தது. கலெக்டர் அரவிந்த் தலைமையில் தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச் சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு, அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலர்மேல் மங்கை, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஞானசேகர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி, ஆதிகேசவ பெருமாள் கோவில் பக்தர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி
தொடர்ந்து அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா 418 வருடங்களுக்கு பிறகு அடுத்த மாதம் (ஜூலை) 6-ந் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி, மாவட்ட நிர்வாகத்தில் உள்ள அனைத்து துறையினரும் ஒன்றிணைந்து பணியாற்றிட அறிவுறுத்தப்படுகிறது. கும்பாபிஷேக விழாவையொட்டி பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் வழங்க ஏற்பாடு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அன்றைய தினம் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து இடங்களில் இருந்தும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பொது விடுமுறை
கும்பாபிஷேகம் நடைபெறும் நாளில் மது விற்பனையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஜூலை 6-ந் தேதி பொது விடுமுறை வழங்க தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கை வைக்கப்படும்.
சுமார் 418 ஆண்டுகளுக்குப்பின் திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெறுவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.