ஒரு ஆண்டாக பூட்டி கிடந்த வீட்டுக்கு ரூ.4,120 கட்டணம்:மின் இணைப்பை துண்டிக்க நுகர்வோர் கோர்ட்டு தடைஅதிகாரிகள் நேரில் ஆஜராகி பதில் அளிக்க உத்தரவு


ஒரு ஆண்டாக பூட்டி கிடந்த வீட்டுக்கு ரூ.4,120 கட்டணம்:மின் இணைப்பை துண்டிக்க நுகர்வோர் கோர்ட்டு தடைஅதிகாரிகள் நேரில் ஆஜராகி பதில் அளிக்க உத்தரவு
x

ஒரு ஆண்டாக பூட்டி கிடந்த வீட்டில் மின் இணைப்பை துண்டிக்க சேலம் நுகர்வோர் கோர்ட்டு தடை விதித்துள்ளது. மேலும் ரூ.4 ஆயிரத்து 120 கட்டணம் விதித்ததால் அதிகாரிகள் நேரில் ஆஜராகி பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சேலம்

சேலம்,

மின்சாரம் பயன்படுத்தவில்லை

சேலம் அஸ்தம்பட்டி எம்.டி.எஸ்.நகர் பின்புறம் உள்ள கே.பி.எம்.நகரை சேர்ந்தவர் மஞ்சுளா. இவரது வீடு 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை 1 வருடம் காலியாக இருந்தது. இதனால் வீட்டில் மின்சாரம் பயன்படுத்தவில்லை.

இந்த சூழலில் அவரது வீட்டு மின் இணைப்புக்கு கட்டணமாக ரூ.4 ஆயிரத்து 120 கட்ட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் வீடு பூட்டப்பட்டு காலியாக இருந்த ஒரு ஆண்டு காலத்திற்கு மின்கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியது இல்லை என்று மஞ்சுளா தரப்பில் மின்வாரிய உதவி பொறியாளரிடம் தெரிவித்திருந்தார். ஆனால் நிலுவை கட்டணம் ரூ.4,120-ஐ கட்ட வேண்டும் என்றும், தவறினால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் உதவி பொறியாளர் மூலம் கடந்த 16-ந் தேதியிட்டு மஞ்சுளாவுக்கு ஒரு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அந்த கடிதம் அவருக்கு 21-ந் தேதி தான் கிடைத்தது.

மின் இணைப்பை துண்டிக்க தடை

இதைத்தொடர்ந்து மஞ்சுளா மின்வாரியம் மீது சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்டஈடு வழங்கக்கோரி தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமைகள் புலனாய்வு கமிட்டி தலைவர் வக்கீல் எஸ்.செல்வம் மூலம் சேலம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும், வழக்கு முடியும் வரை மின் இணைப்பை துண்டிக்கக்கூடாது எனவும் தெரிவித்திருந்தார். அதனை அவசர வழக்காக நேற்று விசாரித்த மாவட்ட நுகர்வோர் ஆணைய நீதிபதி கணேஷ்ராம், வருகிற 6-ந் தேதி வரை மஞ்சுளா பெயரில் உள்ள மின் இணைப்பை துண்டிக்கக்கூடாது எனவும், மேலும், மின் பகிர்மான கழக உதவி பொறியாளர், உதவி செயற் பொறியாளர், செயற்பொறியாளர், மேற்பார்வை பொறியாளர் ஆகியோர் அன்றைய தினம் கோர்ட்டில் நேரில் ஆஜராகி பதில் அளிக்க உத்தரவிட்டார்.


Next Story