நுகர் பொருள் வாணிப கழகத்தை தனியார் மயமாக்க கூடாது
நுகர் பொருள் வாணிப கழகத்தை தனியார் மயமாக்க கூடாது என்ற தொழிற்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தினர்
நாகையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில பொதுச் செயலாளர் புவனேஸ்வரன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ராசப்பன் முன்னிலை வகித்தார். மண்டல செயலாளர் தமிழரசன் வரவேற்றார். கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் புவனேஸ்வரன் பேசும்போது கூறியதாவது:- நெல் கொள்முதல் நிலையங்களில் 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் மூட்டைகள் வரை தேக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் நெல் மூட்டைகள் சேதம் அடைகிறது. இந்த சேத இழப்பீட்டை தொழிலாளர்கள் மீது சுமத்தக்கூடாது. இந்த பொறுப்பை கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை உடனுக்குடன் கொள்முதல் செய்யும் மாவட்ட நிர்வாகமே ஏற்க வேண்டும். விவசாயிகளை காக்க வைக்காமல் உடனுக்குடன் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும். நுகர் பொருள் வாணிப கழகத்தை தனியார் மையமாக்க கூடாது. அனைத்து திறந்த வெளி சேமிப்பு நிலையங்களுக்கும் தேவையான தளவாட பொருட்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதில் சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் தங்கமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். மண்டல துணைத் தலைவர் ஆனந்தன் நன்றி கூறினார்.