மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
விருதுநகர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை என்ஜினீயர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேற்பார்வை என்ஜினீயர் லதா தலைமை தாங்கினார். இதில் மின்வாரிய நிர்வாக என்ஜினீயர்கள், உதவி என்ஜினீயர்கள் மற்றும் மின் நுகர்வோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மின் தடை காலத்தில் விருதுநகரில் உள்ள மின் கட்டணம் வசூலிக்கும் மையத்தில் மின் கட்டணம் செலுத்த முடியாத நிலையில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாளாக இருந்தால் மறுநாள் அபராதம் கட்ட வேண்டிய நிலை பொது மக்களுக்கு ஏற்படுவதால் இதனை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழு உறுப்பினர் அழகு சுந்தரம் கோட்டையூர் பகுதியில் மின் மாற்றி பழுதாக உள்ள நிலையில் அதை மாற்றி அமைக்க வேண்டும். மீனாட்சிபுரம் பகுதியில் கடந்த 10 மாதங்களுக்கு மேல் மின்மாற்றி பழுதாகி உள்ளதாகவும் புகார் கூறினார். கோட்டையூர் பகுதியில் மின் மாற்றி அமைக்க இடம் தருவதாக அவர் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த மேற்பார்வை என்ஜினீயர் லதா மின்மாற்றி அமைக்க இடம் தரும் நிலையில் உடனடியாக ஏற்பாடுகள் செய்வதாக தெரிவித்தார். மேலும் துணை மின் நிலைய பராமரிப்பு நாட்களில் நகர் பகுதியில் மின் கம்பிகள் செல்லும் பகுதியில் தேவையில்லாத மரக்கிளைகள் வெட்டப்படுவதாகவும், வெட்டப்பட்ட மரக்கிளைகள் உடனடியாக அகற்றப்படாமல் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி உள்ளாட்சி அமைப்புகளுக்கு தெரிவித்து வெட்டப்பட்ட மரக்கிளைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. மேலும் துணை மின் நிலைய பராமரிப்பு பணி நடைபெறும் நேரத்தில் மின்தடை பற்றிய அறிவிப்பு குழப்பம் இல்லாமல் வெளியிடப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.