கஞ்சா கடத்தல் வழக்கில் தொடர்பு:குண்டர் சட்டத்தில் பெண் கைது
கஞ்சா வழக்கில் தொடர்புடைய பெண்ணை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் விருப்பாச்சி கிராமத்தை சேர்ந்த முருகேசன் மனைவி முருகேஸ்வரி (வயது 57). இவரை தேனியில் கஞ்சா கடத்தல் தொடர்பான வழக்கில் தேனி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் தேடி வந்தனர். கடந்த மார்ச் மாதம் 12-ந்தேதி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் முருகேஸ்வரியை தேனி தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரை விசாகப்பட்டினம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி தேனிக்கு அழைத்து வந்தனர்.
பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து முருகேஸ்வரியை நிலக்கோட்டை பெண்கள் சிறையில் போலீசார் அடைத்தனர். இதையடுத்து கஞ்சா கடத்தல் வழக்கில் தொடர்புடைய முருகேஸ்வரியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே பரிந்துரை செய்தார். அதன்பேரில் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டார். இதையடுத்து முருகேஸ்வரியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து அவரை நிலக்கோட்டை சிறையில் இருந்து பாதுகாப்பாக அழைத்துச் சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.