சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் பெண் போலீஸ் அதிகாரிக்கு தொடர்பா?
திருவண்ணாமலையில் நடந்த போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் எழுத்து தேர்வில் முறைகேடு சம்பவத்தில் கைதான பெண் மற்றும் அவரது கணவரான சப்-இன்ஸ்பெக்டர், மற்றொரு சப்-இன்ஸ்பெக்டரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலையில் நடந்த போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் எழுத்து தேர்வில் முறைகேடு சம்பவத்தில் கைதான பெண் மற்றும் அவரது கணவரான சப்-இன்ஸ்பெக்டர், மற்றொரு சப்-இன்ஸ்பெக்டரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சப்- இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேடு
தமிழகத்தில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்துத் தேர்வு கடந்த 26-ந் தேதி நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 6 மையங்களில் நடைபெற்றது. தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற தேர்வில் திருவண்ணாமலையை அடுத்த வேட்டவலத்தை சேர்ந்த சென்னை சப்-இன்ஸ்பெக்டர் சுமன் மனைவி லாவண்யா என்பவர் பங்கேற்றார். இவர் தேர்வின்போது கழிவறைக்கு சென்று செல்போன் மூலம் வினாத்தாளை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளார். அதற்கான விடைகளுடன் 'வாட்ஸ் அப்'பில் அனுப்ப செய்து அவற்றை விடைத் தாளில் குறிப்பிட முயன்ற முறைகேட்டில் லாவண்யா சிக்கினார்.
இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின் பேரில் வெறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் லாவண்யாவிற்கு தேர்வில் முறைகேட்டில் ஈடுபட அவரது கணவரான சப்-இன்ஸ்பெக்டர் சுமன், அவலூர்பேட்டையை சேர்ந்த சப்- இன்ஸ்பெக்டர் சிவக்குமார், செங்கத்தை சேர்ந்த தனியார் மருத்துவமனை டாக்டர் பிரவீன்குமார் ஆகியோர் உடந்தையாக இருந்தது தெரியவந்தது.
4 பேர் கைது
இதையடுத்து லாவண்யா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சப்-இன்ஸ்பெக்டரான அவரது கணவர் சுமன், மற்றொரு சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார், டாக்டர் பிரவீன்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தேர்வு, பல்வேறு கட்டுப்பாடு விதிகளுடன் நடைபெறும். தேர்வு நடைபெறும் வளாகத்திற்கு செல்போன் உள்ளிட்ட பொருட்கள் செல்ல அனுமதி கிடையாது. பலத்த சோதனைக்கு பின்னர் தான் தேர்வர்கள் தேர்வு மைய வளாகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
அவ்வாறு இருக்கும் சூழ்நிலையில் தேர்வு மையத்திற்குள் லாவண்யாவிடம் செல்போன் வந்தது எப்படி? என்ற கேள்வி போலீசார் மற்றும் சக தேர்வர்களிடையே ஏற்பட்டு உள்ளது.
மேலும் லாவண்யா கழிவறையிலிருந்து வந்தபோது சோதனை நடத்திய போலீசாரிடம் வேறு சில போலீசார் சோதனையிட வேண்டாம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அத்துடன் கைதான சப்-இன்ஸ்பெக்டர் சுமனின் சகோதரி திருவண்ணாமலை போலீசில் முக்கிய அதிகாரியாக பணியாற்றி வருவதாகவும் தெரிகிறது. அவரும் இந்த முறைகேடு சம்பவத்திற்கு உடந்தையாக இருந்தாரா என்று சந்தேகம் எழுந்து உள்ளது.
காவலில் எடுத்து விசாரணை
இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணை மேற்கொள்வதற்காக நேற்று வெறையூர் போலீசார் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட லாவண்யா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்து கைதாக அவரது கணவர் சுமன், சிவக்குமார், பிரவீன்குமார் ஆகியோரை ஒரு நாள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைக்கலாம் என்றும் போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
மேலும் இந்த சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்த வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.