கன்டெய்னர் லாரிமோதி ஓய்வு பெற்ற ராணுவ வீரர் காயம்
பள்ளிகொண்டா அருகே கன்டெய்னர் லாரிமோதி ஓய்வு பெற்ற ராணுவ வீரர் காயமடைந்தார்.
அணைக்கட்டு அடுத்து கெங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 42), ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவர் நேற்று மாலை தனது மோட்டார்சைக்கிளில் பள்ளிகொண்டாவில் இருந்து ஊருக்கு செல்வதற்காக கந்தனேரி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது வேலூரில் இருந்து ஆம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மோட்டார்சைக்கிள் மீது மோதி.து.
இதில் அருணாச்சலம் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் பள்ளிகொண்டா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கன்டெய்னர் லாரியின் அடியில் சிக்கிக் கொண்டிருந்த மோட்டார்சைக்களை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து லாரி டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.