கன்டெய்னர் லாரி மோதி அரசு கேபிள் டி.வி. ஊழியர் பலி


கன்டெய்னர் லாரி மோதி அரசு கேபிள் டி.வி. ஊழியர் பலி
x

கொடைரோடு அருகே கன்டெய்னர் லாரி மோதி அரசு கேபிள் டி.வி. அலுவலக ஊழியர் பலியானார். லாரியில் சிக்கிய அவர், ஒரு கிலோமீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டு கொடூரமான முறையில் இறந்தார்.

திண்டுக்கல்

அரசு கேபிள் டி.வி. அலுவலக ஊழியர்

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள பள்ளப்பட்டியை சேர்ந்தவர் தமிழேந்திரன் சர்க்கார் (வயது 34). இவர் திண்டுக்கல் அரசு கேபிள் டி.வி. அலுவலகத்தில் தொழில் நுட்ப உதவியாளராக பணி புரிந்து வந்தார்.

அவருடைய மனைவி அஜித்தா (28). இவர் அம்மையநாயக்கனூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதியின் மகள் ஜியா (5). அதே பள்ளியில் யூ.கே.ஜி. படித்து வருகிறாள்.

தமிழேந்திரன் சர்க்கார், தினமும் தனது மனைவி மற்றும் மகளை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று பள்ளியில் விட்டு விட்டு திண்டுக்கல்லுக்கு வேலைக்கு செல்வது வழக்கம்.

கன்டெய்னர் லாரி மோதல்

அதன்படி நேற்று காலை அஜித்தா, ஜியா ஆகியோருடன் தனது மோட்டார் சைக்கிளில் தமிழேந்திரன் சர்க்கார் பள்ளப்பட்டியில் இருந்து புறப்பட்டு அம்மையநாயக்கனூரில் உள்ள பள்ளி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

மதுரை-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் பொட்டிசெட்டிபட்டி பிரிவு அருகே மோட்டார் சைக்கிள் வந்தது. அங்கு போலீஸ்துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்பை (பேரிகார்டர்) மோட்டார் சைக்கிள் கடந்தது.

அப்போது மோட்டார் சைக்கிளின் பின்னால், தூத்துக்குடியில் இருந்து வடமதுரை நோக்கி கன்டெய்னர் லாரி ஒன்று வந்தது. அந்த லாரி, இரும்பு தடுப்பின் மீது மோதியதோடு, மோட்டார் சைக்கிள் மீதும் மோதியது.

உடல் சிதைந்து பலி

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த அஜித்தா, ஜியா ஆகியோர் சாலையின் இடதுபுறத்தில் தூக்கி வீசப்பட்டனர். மோட்டார் சைக்கிளும் சாலையோரத்தில் விழுந்தது.

ஆனால் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த தமிழேந்திரன் சர்க்கார், கன்டெய்னர் லாரியின் பின் சக்கரங்களை இணைக்கும் இரும்பு கம்பிக்கு இடையே சிக்கி கொண்டார். இதனை லாரி டிரைவர் கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் இரும்பு தடுப்பு மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதியதால் பதற்றம் அடைந்த டிரைவர், லாரியை நிறுத்தாமல் திண்டுக்கல் நோக்கி வேகமாக ஓட்டினார். இதற்கிடையே லாரியில் சிக்கிய தமிழேந்திரன் சர்க்கார் கதறினார். ஆனால் அது டிரைவருக்கு கேட்கவில்லை.

லாரியில் சிக்கிய அவர் சாலையில் தர, தரவென இழுத்து செல்லப்பட்டார். இதில் அவரது உடலின் இடுப்புக்கு கீழ் உள்ள பகுதி சாலையில் உராய்ந்தபடியே சென்றது. இதில் உடல் சிதைந்து உருக்குலைந்து போன அவர், ஓடும் லாரியில் சிக்கியபடியே பரிதாபமாக இறந்தார்.

ஒரு கிலோமீட்டர் தூரம்...

இதற்கிடையே விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த நிலையில், சாலையில் கிடந்த அஜித்தா தனது கணவரை காணவில்லை என்று கூறி கதறி அழுதார். இதனைக்கேட்டு அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து மோட்டார் சைக்கிள்களில் லாரியை பின்தொடர்ந்து விரட்டி சென்றனர். ஆனால் அதற்குள் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் லாரி சென்று விட்டது. லாரியை முந்தி சென்று மோட்டார்சைக்கிள்களை நிறுத்தி மடக்கினர்.

பின்னா் லாரியின் பின்பக்கத்தில் பார்த்தபோது, அங்குள்ள கம்பியில் சிக்கிய நிலையில் உடல் சிதைந்தபடி தமிழேந்திரன் சர்க்கார் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மனைவி, மகளுக்கு சிகிச்சை

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன், அம்மையநாயக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் அங்கு விரைந்தனர்.

பின்னர் தமிழேந்திரன் சர்க்கார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இது தொடர்பாக லாரி டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கிடையே படுகாயம் அடைந்த அஜித்தா, ஜியா ஆகியோருக்கு வத்தலக்குண்டுவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உறவினர்கள் கதறல்

விபத்தில் சிக்கி கொடூரமான முறையில் உயிரிழந்த தமிழேந்திரன் சர்க்கார், உடலை பார்த்து அவரது உறவினர்கள் கதறி அழுத காட்சி கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

அரசு கேபிள் டி.வி. அலுவலக ஊழியர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அம்மையநாயக்கனூர், பள்ளப்பட்டி பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. இந்தநிலையில் உயிர் பலி வாங்க காரணமாக இருந்த இரும்பு தடுப்புகளை போலீசார் உடனடியாக அகற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story