கன்டெய்னர் லாரி மோதி அரசு கேபிள் டி.வி. ஊழியர் பலி
லாரி மோதி அரசு கேபிள் டி.வி. அலுவலக ஊழியர் பலியானார். லாரியில் சிக்கிய அவரது உடல், ஒரு கிலோமீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டது.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியை சேர்ந்தவர் தமிழேந்திரன் சர்க்கார் (வயது 34). இவர் திண்டுக்கல் அரசு கேபிள் டி.வி. அலுவலகத்தில் தொழில் நுட்ப உதவியாளராக பணி புரிந்து வந்தார்.
அவருடைய மனைவி அஜித்தா (28). இவர் அம்மையநாயக்கனூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதியின் மகள் ஜியா (5). அதே பள்ளியில் யூ.கே.ஜி. படித்து வருகிறாள்.
தமிழேந்திரன் சர்க்கார், தினமும் தனது மனைவி மற்றும் மகளை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று பள்ளியில் விட்டுவிட்டு திண்டுக்கல்லுக்கு வேலைக்கு செல்வது வழக்கம்.
கன்டெய்னர் லாரி மோதியது
அதன்படி நேற்று காலை அஜித்தா, ஜியா ஆகியோருடன் தனது மோட்டார் சைக்கிளில் தமிழேந்திரன் அம்மையநாயக்கனூரில் உள்ள பள்ளியை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
மதுரை-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் பொட்டிசெட்டிபட்டி பிரிவு அருகே போலீசாரால் வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்பை (பேரிகார்டர்) அவரது மோட்டார் சைக்கிள் கடந்து சென்றபோது, பின்னால் வந்த ஒரு கன்டெய்னர் லாரி இரும்பு தடுப்பின் மீது மோதியதோடு, தமிழேந்திரன் சர்க்காரின் மோட்டார் சைக்கிள் மீதும் மோதியது.
உடல் சிதைந்து பலி
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்த அஜித்தா, ஜியா ஆகியோர் சாலையின் இடதுபுறத்தில் தூக்கி வீசப்பட்டனர். மோட்டார் சைக்கிளும் சாலையோரத்தில் விழுந்தது.
ஆனால் தமிழேந்திரன் சர்க்கார், லாரியின் பின் சக்கரங்களை இணைக்கும் இரும்பு கம்பிக்கு இடையே சிக்கி கொண்டார். இரும்பு தடுப்பு மற்றும் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதால் பயந்துபோன டிரைவர், லாரியை நிறுத்தாமல் வேகமாக ஓட்டினார். இதனால் லாரியில் சிக்கிய தமிழேந்திரன் சர்க்கார் சாலையில் தரதரவென இழுத்து செல்லப்பட்டார்.
ஒரு கி.மீ. தூரம் இழுத்து செல்லப்பட்ட உடல்
இதில் உடல் சிதைந்து அவர் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டது. இதற்கிடையே விபத்து பார்த்து அதிர்ச்சி அடைந்த சிலர் மோட்டார்சைக்கிளில் விரட்டி வந்து லாரியை மடக்கி நிறுத்தினர்.
இதையடுத்து தகவல் அறிந்து வந்த நிலக்கோட்டை போலீசார் தமிழேந்திரன் சர்க்கார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே படுகாயம் அடைந்த அஜித்தா, ஜியா ஆகியோருக்கு வத்தலக்குண்டுவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.