கும்பகோணத்தில் இருந்து புனித நீர் அடங்கிய குடங்கள் அனுப்பி வைப்பு


கும்பகோணத்தில் இருந்து புனித நீர் அடங்கிய குடங்கள் அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 28 July 2023 12:15 AM IST (Updated: 28 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலுக்கு கும்பகோணத்தில் இருந்து புனிதநீர் அடங்கிய குடங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

தஞ்சாவூர்

கும்பகோணம்:

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலுக்கு கும்பகோணத்தில் இருந்து புனிதநீர் அடங்கிய குடங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு

அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. அங்கு குடமுழுக்கு விழா அடுத்த ஆண்டு(2024) ஜனவரி மாதம் 14-ந் தேதி மகர சங்கராந்தி நாளன்று நடைபெறும் என ராமஜென்ம பூமி அறக்கட்டளை நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த குடமுழுக்கு விழாவிற்காக அகில பாரத இந்து மகா சபை சார்பில் கும்பகோணத்தில் உள்ள காவிரி ஆறு, மகாமக குளம், பொற்றாமரை குளம் ஆகியவற்றில் இருந்து புனித நீரை 3 குடங்களில் நிரப்பி அயோத்திக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

ஊர்வலம்

இதை முன்னிட்டு தென்னக அயோத்தி என்றழைக்கப்படும் கும்பகோணம் ராமசாமி கோவிலில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. அதைத்தொடர்ந்து புனித நீர் அடங்கிய குடங்கள் ராமநாம பஜனையுடன் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன.

நிகழ்ச்சிக்கு அகில பாரத இந்து மகா சபை மாநில பொதுச்செயலாளர் செந்தில் முருகன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பர்வத மலை முத்துசாய் சுவாமிகள், கரூர் மூலிகை மர சித்தர் சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டு குடங்கள் புறப்பாட்டினை தொடங்கி வைத்தனர்.

இதில் மாநில தலைவர் ரமேஷ்பாபு, சிவசேனா செயல் தலைவர் சசிகுமார், மண்டல தலைவர் ஆனந்த், பா.ஜனதா மாவட்ட தலைவர் சதீஷ்குமார், துணைத் தலைவர் வேதா, மாவட்ட வக்கீல் பிரிவு அமைப்பாளர் சுரேஷ்குமார், இந்து மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் குருமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

விமானம் மூலம்...

புனிதநீர் அடங்கிய குடங்கள் நேற்று இரவு கும்பகோணத்தில் இருந்து சென்னைக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது. அங்கிருந்து விமானம் மூலம் அயோத்தியில் உள்ள தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை நிர்வாகியிடம் இன்று(வெள்ளிக்கழமை) ஒப்படைக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் கும்பகோணத்தை ஆன்மிக சுற்றுலா மையமாகவும், மாசி மகாமக விழாவை தேசிய விழாவாக அறிவிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்த உள்ளதாக அகில பாரத இந்து மகா சபை நிர்வாகிகள் தெரிவித்தனர்.


Next Story