கோர்ட்டு அவமதிப்பு வழக்கு: ஐ.ஏ.எஸ். அதிகாரி உள்பட 3 பேருக்கு விதித்த தண்டனை நிறுத்தி வைப்பு
கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரி உள்பட 3 பேருக்கு விதித்த தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ஞானப்பிரகாசம், மதுரை ஐகோர்ட்டில் கடந்த 2020-ம் ஆண்டு தாக்கல் செய்த அவமதிப்பு மனுவில், நான் கல்வித்துறையில் கடந்த பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். என்னுடைய பணியை நிரந்தரம் செய்யக்கோரி, மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன்.
அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு என்னுடைய பணியை நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், உரிய பணப் பலன்களை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. ஆனாலும் கோர்ட்டு உத்தரவின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை ஐகோர்ட்டு நீதிபதி பட்டு தேவானந்த் விசாரித்து நேற்று முன்தினம் பிறப்பித்த உத்தரவில், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை செயலாளரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான பிரதீப் யாதவ், ஆசிரியர் பயிற்சி நிறுவன இயக்குனர் முத்து பழனிசாமி, நெல்லை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் பூபாலா ஆன்டோ ஆகிய 3 பேருக்கும் 2 வாரம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
இந்த தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
முடிவில், ஐ.ஏ.எஸ். அதிகாரி உள்பட 3 பேருக்கு விதித்த தண்டனையை நிறுத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.