தொடரும் கடல் சீற்றம்: குமரியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
குமரியில் தொடரும் கடல் சீற்றத்தால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
குளச்சல்,
குமரியில் தொடரும் கடல் சீற்றத்தால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
தொடரும் கடல் சீற்றம்
குமரி மாவட்டத்தில் கடல் சீற்றத்தால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அழிக்கால், மிடாலம் உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் கடல்நீர் ஊருக்குள் புகுந்தது. இதில் அழிக்கால் கிராமம் பெரும் பாதிப்பை சந்தித்தது. சுமார் 75 வீடுகளில் வசித்த குடும்பத்தினர் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். அதன்பிறகும் கடல் அலையின் ஆக்ரோஷம் தணியவில்லை. தொடர்ந்து சீற்றமாகவே உள்ளது.
மேலும் குமரி கடல் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் எனவும், இதனால் மீனவர்கள் 2 நாட்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.
மீன்பிடிக்க செல்லவில்லை
அதன்படி கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாகக் கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடித்து வந்த மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் விசைப்படகுகள் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்தன. மேலும் வள்ளம், கட்டுமர மீனவர்களும் மீன்பிடிக்க செல்லவில்லை.
குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 1000-க்கும் மேற்பட்ட வள்ளம், கட்டுமர படகுகளில் மீனவர்கள் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் ஏற்கனவே விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இந்தநிலையில் பலத்த சூறைக்காற்றாலும், கடல் சீற்றத்தாலும் வள்ளம், கட்டுமர படகில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களும் 3 நாட்களாக மீன்பிடிக்க செல்லவில்லை. எனவே குளச்சல் பகுதியில் 3-வது நாளாக மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டதால் மீன் வரத்து இல்லாமல் மீன் பிரியர்களும், வியாபாரிகளும் ஏமாற்றம் அடைந்தனர்.