நிலக்கரி எடுக்கும் திட்டத்தை கைவிடக்கோரி திருச்சியில் 12-ந்தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டம்


நிலக்கரி எடுக்கும் திட்டத்தை கைவிடக்கோரி திருச்சியில் 12-ந்தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டம்
x

நிலக்கரி எடுக்கும் திட்டத்தை கைவிடக்கோரி திருச்சியில் 12-ந்தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த இருப்பதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு அறிவித்துள்ளார்.

திருச்சி,

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் மாநில துணைத்தலைவர் மேகநாதன் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு நேற்று மதியம் வந்தனர். அவர்கள் போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியாவை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலின்போது தற்போதைய உள்துறை மந்திரியாக உள்ள அமித்ஷா விவசாயிகளுக்கு பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்தார். அதன்படி, விவசாய விளைபொருட்களுக்கு 2 மடங்கு லாபகரமான விலை, கோதாவரி நதியில் இருந்து உபயோகமின்றி கடலில் கலக்கும் நீரை காவிரியுடன் இணைக்கும் திட்டம் உள்ளிட்ட எந்த ஒரு கோரிக்கைகளையும் இன்று வரை நிறைவேற்றவில்லை. அறிவிப்போடு உள்ளது.

நிலக்கரி எடுக்கும் திட்டம்

இந்தநிலையில் டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி எடுக்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு தொடர்ந்து அவற்றை அனுமதிக்காமல் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி சென்று போராட்டம் நடத்த அனுமதி கேட்டோம். ஆனால் காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. இதனால் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில் வருகிற 12-ந்தேதி முதல் 30 நாட்கள் தொடர் காத்திருப்பு போராட்டம் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நடத்த இருக்கிறோம். அதற்கு அனுமதி அளிக்க வேண்டுகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

30 நாட்கள் போராட்டம்

மேலும் இதுகுறித்து அய்யாக்கண்ணு கூறும்போது, 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி திருச்சியில் வருகிற 12-ந்தேதி முதல் 30 நாட்கள் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த இருக்கிறோம். அப்போது, நூதன முறையில் போராட்டங்களை நடத்துவோம். மத்திய அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். நிலக்கரி எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து காவல்துறை அனுமதி கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்றார்.


Next Story