நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு பவானிசாகர் அணை நீர்மட்டம் 105 அடியை நெருங்குகிறது ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு   பவானிசாகர் அணை நீர்மட்டம்   105 அடியை நெருங்குகிறது  ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
x
தினத்தந்தி 13 Dec 2022 1:00 AM IST (Updated: 13 Dec 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ஈரோடு

நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் பவானிசாகர் அணை நீர்மட்டம் 105 அடியை நெருங்குகிறது. இதனால் ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பவானிசாகர் அணை

தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை மற்றும் தமிழ்நாட்டில் 2-வது பெரிய அணை என்ற பெருமை கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி என கணக்கிடப்படுகிறது. பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் வழியாக 5 மதகுகள் மூலம் திறக்கப்படும் தண்ணீரின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

இதேபோல் பவானி ஆற்றில் 9 மதகுகள் மூலம் திறக்கப்படும் தண்ணீரின் மூலம் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் பாசன வாய்க்கால்கள் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணை என்பது குறிப்பிடத்தக்கது.

நீர்வரத்து அதிகரிப்பு

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 4 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 103.95 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 522 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 655 கன அடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 104.22 அடியாக உயர்ந்தது. பவானி ஆற்றில் வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. பெருந்துறை அருகே செல்லும் கீழ்பவானி வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு உள்ளதால் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டது.

வெள்ள அபாய எச்சரிக்கை

பவானிசாகர் அணைக்கு தண்ணீர் அதிகமாக வருவதாலும், அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் குறைக்கப்பட்டுள்ளதாலும் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் அணை முழு கொள்ளளவான 105 அடியை நெருங்கி வருகிறது.

இதன் காரணமாக பொதுப்பணித்துறை சார்பாக பவானிசாகரில் இருந்து பவானி கூடுதுறை வரை உள்ள பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இரு பக்கத்திலும் உள்ள கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


Next Story